திருப்பரங்குன்றம்:தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு திருப்பரங்குன்றம் மக்கள் சார்பில் மலைக்கு பின்புறம் கோயில் நிலத்தில் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சி நடந்தது. புத்தாண்டை முன்னிட்டு, கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம், கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியாகி அருள்பாலித்தனர். விவசாயிகள் குழந்தைகளுடன் புதிய தார் குச்சி நுனியில் ஆனி அடித்து அதில் பூச்சுற்றி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் முடித்து, மலையை சுற்றிவந்து நான்கு ஏர்களில் காளைகளை பூட்டி நிலங்களை உழுதனர். கல்வெட்டு குகை கோயில் முன்பு கிராமத்தினர், ஏழு குளம் பாசன விவசாயிகள் கூடி திருவிழா கொண்டாட்டம், விவசாயம் குறித்தும், தொழில்களுக்கான கூலி நிர்ணயம் செய்து ஆலோசனை நடத்தினர். விவசாயம் செழிக்கவும் மக்கள் நலம் பெற வேண்டியும் பாரம்பரியம் மாறாமல் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.