பதிவு செய்த நாள்
20
ஏப்
2017
11:04
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், கிரிவலப்பாதையில் உள்ள வருண லிங்கம் கோவிலில், நேற்று மழை வேண்டிய, சிறப்பு பூஜை நடந்தது. சிவாச்சாரியார்கள் நீர் நிரம்பிய பாத்திரத்தில் அமர்ந்து, வருண பூஜை செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், நேற்று முன்தினம், 43.44 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதேபோல் நேற்றும் கடும் வெயில் வாட்டியது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், மழை வேண்டி அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், கிரிவலப்பாதையில் உள்ள வருணலிங்கம் கோவில் வளாகத்தில், நேற்று சிறப்பு யாக சாலை அமைக்கப்பட்டு, பூஜை நடத்தப்பட்டது. மேலும், நான்கு சிவாச்சாரியார்கள், காலை, 10:00 மணிக்கு, பெரிய நீர் நிரப்பிய பாத்திரத்தில் அமர்ந்து, மழை பெய்ய வருண பகவானை வேண்டி, பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பகல், 12:00 மணி வரை, இந்த பிரார்த்தனை நடந்தது. இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.