பதிவு செய்த நாள்
20
ஏப்
2017
12:04
தேனி: நீர்வரத்து இன்றி வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், பெரியாறு, வைகை அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை. இதனால், நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பெரியாறு அணையின் நீர், மூன்று மாதங்களாக, மதுரை, தேனி மாவட்ட குடிநீர் பயன்பாட்டிற்காக மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. அணையின் நேற்றைய நீர்மட்டம், 110 அடியாக இருந்தது. 911 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு, 60 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. வெயில் தாக்கம் அதிகம் நிலவுவதால், வழியிலேயே ஆவியாகி விடுகிறது.
வைகைக்கு நீர்வரத்து இல்லை: பெரியாறு அணையில் குறைந்தளவு நீர் வெளியேற்றத்தால், ஏப்., 9 முதல், வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை. நேற்றைய நீர்மட்டம், 23.59 அடியாக இருந்தது. மொத்த உயரம், 71 அடி. 174 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. இங்கிருந்து, மதுரை- - சேடப்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக வினாடிக்கு, 40 கனஅடி திறக்கப்படுகிறது. நீர்வரத்து இன்றி இதே நிலை நீடித்தால், மதுரைக்கு இன்னும், 10 நாட்களுக்கு மட்டுமே, வைகை அணையில் இருந்து குடிநீர் வழங்க முடியும்.
சிக்கல்: மதுரை சித்திரை திருவிழாவில், மே 10ல், கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார். இந்தாண்டு வைகை அணையில் இருந்து, ஆற்றில் தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை உருவாகி உள்ளது. வைகை அணையில் குறைந்தபட்சம், 35 அடி நீர் இருந்தால் தான், அந்த வைபவத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் என, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.