பதிவு செய்த நாள்
08
நவ
2011
11:11
மோகனூர்: அரூர் பாப்பாத்தி அம்மன் கோவிலில், நவம்பர் 13ம் தேதி, கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடக்கிறது. மோகனூர் யூனியன், அரூரில், பாப்பாத்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணி கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. திருப்பணி அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, நவம்பர் 13ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் செய்ய விழா குழுவினரால் முடிவு செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு, நவம்பர் 12ம் தேதி காலை 8.30 மணிக்கு கணபதி வழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்குகிறது. தொடர்ந்து, நவக்கிரக மகாலட்சுமி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. காலை 11 மணிக்கு, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்படுகிறது. அன்று மாலை 6.30 மணிக்கு வாஸ்துசாந்தி, யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜை, இரவு 9 மணிக்கு கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நவம்பர் 13ம் தேதி காலை 7 மணிக்கு, மங்கள இசை, விநாயகர் வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜை, கடம்புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9 மணிக்கு பாப்பாத்தி அம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து, மகா அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், குலப்பங்காளிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.