சூரமங்கலம்: மழை வேண்டி, முஸ்லிம்கள் நேற்று சேலம் ஜங்ஷன் அருகே, சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இமாம் பேரவை மாநில தலைவர் ஷிஹாபுத்தீன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் அன்வர் அலி பாக்கவி, பொருளாளர் அப்துல் ஜப்பார் ஸக்காபி, செய்தி தொடர்பாளர் முஹம்மது பீலாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பலர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள, கடும் வறட்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல பகுதிகளில் பொதுமக்கள் குடிநீருக்காக அலைகின்றனர். இதையடுத்து, மழை வேண்டி ஆங்காங்கே சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் தண்ணீரில் அமர்ந்து வருண ஜபம் போன்றவை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணியளவில் தமிழக இமாம் பேரவை சார்பாக சேலம், ஜங்ஷன் தாருஸ் ஸலாம் பள்ளி வளாகத்தில், நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மழை பெய்ய வேண்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர்.