பதிவு செய்த நாள்
08
மே
2017
03:05
காஞ்சிபுரம்:வரதராஜப்பெருமாள் சித்ரா பவுர்ணமி நாளில், ஐயங்கார்குளம் பகுதியில் உள்ள, நடவாவி கிணற்றில் எழுந்தருளும், நடவாவி உற்சவம், 10ம் தேதி, புதன் கிழமை
நடைபெறுகிறது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி நாளில், பாலாற்றில் எழுந்தருள்வார். அதற்காக, முதல் நாள் இரவு, கோவிலில் இருந்து புறப்பட்டு, செவிலிமேடு, புஞ்சையரசந்தாங்கல், தூசி, வாகை, நத்தக்கொள்ளை ஆகிய கிராமங்களுக்கு சென்று, சித்ரா பவுர்ணமி அன்று காலை, ஐயங்கார்குளம் சஞ்சீவராயர் கோவிலை சென்றடைவார்.
அங்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். தொடர்ந்து, இரவு, 8:30 மணிக்கு அங்குள்ள நடவாவி கிணற்றில் பெருமாள் எழுந்தருள்வார்.தரையில், சில மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள, குளிர்ந்த, 16 கால் மண்டபம் மற்றும் கிணற்றின் அருகே எழுந்தருளும்
பெருமாளுக்கு, சிறப்பு வழிபாடு நடைபெறும்.இரவு, 9:00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, பாலாறு செல்வார்.பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில், ஸ்ரீதேவி, பூதேவியருடன், பெருமாள் எழுந்தருள்வர். அன்று இரவு அங்கு, பெருமாள் மற்றும் தேவியருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.
தொடர்ந்து, பிரம்ம ஆராதனை முடிந்து, நள்ளிரவில் பெருமாள் தூப்புல் தேசிகர் கோவிலுக்கு செல்வார். அங்கு பெருமாளுக்கு மரியாதை செலுத்தப்படும். அங்கிருந்து புறப்பட்டு, காலை, 7:00 மணிக்கு, பெருமாள் கோவிலை சென்றடைவார்.
இந்த விழாவிற்காக, காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் ஆற்றில் கூடுவர். இரவு முழுவதும். பாலாற்றில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.