பதிவு செய்த நாள்
16
மே
2017
12:05
குளித்தலை: குளித்தலை மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, இன்று திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. குளித்தலை, மகா மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா முன்னிட்டு, கடந்த, ஏப்., 30 முதல், நாள்தோறும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், பால்குட, தீர்த்தக்குட, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை மணத்தட்டை, தேவதானம், வாலாந்தூர், பாரதி நகர், மலையப்பன் நகர் போன்ற பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், பால்குட, அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்தனர். தொடர்ந்து, கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இன்று (மே, 16) காலை 10:00 மணியளவில், திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், முக்கிய வீதி வழியாக தேர் இழுக்கப்பட்டு, தேர் நிலைக்கு வந்தவுடன், தீ மிதித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.