காரைக்குடி: காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம் இன்று நடக்கிறது. காரைக்குடிகொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை - வைகாசி விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவின் எட்டாம் நாளான இன்று தேர் கொப்புடையம்மன் கோயிலிலிருந்து கிளம்பி, காட்டம்மன் கோயிலுக்கு செல்லும். அங்கு ஊஞ்சல் விழா நடக்கும். நாளை அங்கிருந்து கிளம்பி அதே பாதையில் தேர் கோயிலை வந்தடையும்.இந்த தேர் திருவிழா 200 ஆண்டுக்கும் மேல் பழமை வாய்ந்தது. தேர் செல்லும் பாதை கண்மாய் என்பதாலும், கரடுமுரடாக இருப்பதாலும், முன்னோர்கள் பனை சட்டத்திலான தேராகவே செய்தனர். கீழ் சக்கரங்கள் தவிர்த்து மேல் பகுதி சட்டங்கள் மூலம் கட்டப்படும். செல்லும் பாதையில் ஏற்படும் ஆட்டத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, இயற்கையான திகழாங் கொடி (தையிலான் கொடி) கொண்டு சட்டங்களை இணைத்து கட்டுகின்றனர். வேறு எங்கும் இந்த நடைமுறை கிடையாது. இந்த கொடிகளை அமராவதிபுதுார் காட்டு பகுதியிலிருந்து சேகரித்து வந்து கட்டுகின்றனர். தற்போது பனை சட்டத்துக்கு பதிலாக மர சட்டங்களும், இரும்பு பைப்களும் பயன்படுத்தப்படுகிறது.