காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2017 10:05
காரைக்குடி: காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் செவ்வாய் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை - வைகாசி விழாவாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா கடந்த 9-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. ஏழாம் திருநாளான நேற்று முன்தினம் அம்பாள் வெள்ளி குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 6:30 மணிக்கு நடந்தது. முன்னதாக காலை 10:47 மணிக்கு அம்பாள் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. தேரோட்டத்தின்போது ஏராளமான பெண்கள் மதுக்குடம் எடுத்து வந்து தேரை மும்முறை வலம் வந்தனர். இன்று காலை 9:00 மணிக்கு திருத்தேர் கொப்புடையம்மன் கோயிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செந்தில்வேலன், உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் செல்வி மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.