பதிவு செய்த நாள்
24
மே
2017
02:05
காஞ்சிபுரம் : திருப்புட்குழி, விஜயராகவ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, இலவச தங்கும் அறை கட்டும் பணி முடிந்து விட்டது. இம்மாதம் இறுதிக்குள் திறக்கப்படும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் அடுத்த, திருப்புட்குழியில் அமைந்துள்ள விஜயராகவப் பெருமாள் கோவிலுக்கு, அமாவாசை அன்று, வெளி மாவட்டங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
குறிப்பாக, குழந்தை பேறு வேண்டி, பெண்கள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் பெண்கள் முதல் நாள் வந்து தங்கி, கோவிலில் கொடுக்கும் வறுத்த பச்சை பயிரை ஈர சேலையில் கட்டி, மறுநாள் காலை மரகதவல்லி தாயார் சன்னதியில் அவிழ்த்து பார்ப்பர்.அதில் முளை விட்டிருந்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதற்காக, ஒவ்வொரு அமாவாசை அன்றும், திருமணமான பெண்கள், தங்கள் உறவினர்களுடன் வந்து தங்குவர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு, அந்த ஊரில் தங்குவதற்கு போதிய வசதி கிடையாது.
மேலும், தனியார் தங்கும் விடுதியிலும், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதையடுத்து, கோவில் சார்பில், 15 லட்சம் ரூபாய் செலவில், பக்தர்கள் இலவசமாக தங்கும் அறை கட்டும்
பணி, இரு மாதங்களுக்கு முன் துவங்கியது.
ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி அறை ஒதுக்கப்பட்டு, பணி முடிந்துள்ளது. இம்மாதம் இறுதிக்குள் திறக்கப்படும் என, கோவில் செயல் அலுவலர் தெரிவித்தார்.