பதிவு செய்த நாள்
25
மே
2017
12:05
பொங்கலூர் : பொங்கலூர் கண்டியன்கோவிலில் உள்ள சின்னமாரியம்மன் கோவிலில், மழை வேண்டி நடந்த வருண ஜெபத்தின் போது, திடீரென மழை பெய்ததால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்தாண்டு கடும் வறட்சி நிலவி, விவசாயம் பொய்த்து போனது. மழையின்றி, நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, பல இடங்களில் குடிநீருக்கு பஞ்சம் ஏற்பட்டது. இதையடுத்து, மழை பெய்ய வேண்டும் என்ற வேண்டுதலோடு, பல கோவில்களில் வருண ஜெபம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், கண்டியன்கோவில் கிராம பொதுமக்கள் சார்பில், சின்னமாரியம்மன், ஊர் விநாயகர், நைனார் சுவாமி, பட்டி விநாயகருக்குச் சிறப்பு பூஜை நடைபெற்றது. விநாயகர் வழிபாட்டுடன், புண்யாக வாசனை, பஞ்சகவ்ய பூஜை, வருண ஜெபம், சிறப்பு அபிஷேகம், வருண யாகம், தீர்த்தாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின், தீபகம்பத்தின் முன், வருண பகவானை எழுந்தளருச்செய்து, ஐந்து வகையான சுத்தான்னம் செய்து, ஐந்து படையல் வைத்து, வருண பகவானை வேண்டி, பொதுமக்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். அப்போது, திடீரென இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதை பார்த்த பக்தர்கள், வேண்டுதலுக்கு உடனே பலன் கிடைத்தது கண்டு, பரவசமடைந்தனர்.