பதிவு செய்த நாள்
25
மே
2017
12:05
வேலுார்: உத்தர ரங்கநாதர் கோவிலுக்கு, மூன்று மாதத்தில் புதிய கொடிமரம் அமைக்கப்படும் என, கோவில் செயல் அலுவலர் கூறினார். வேலுார் மாவட்டத்தில், திங்கள் மாலை, 5:00 மணிக்கு வீசிய சூறாவளி காற்றால், பல்வேறு இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. பள்ளிகொண்டா உத்தர ரங்கநாதர் கோவிலில் உள்ள கொடிமரம் சாய்ந்து விழுந்தது. இதையடுத்து, கோவிலில் நேற்று முன்தினம் பரிகார பூஜை செய்யப்பட்டது; புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் குமரன் கூறியதாவது: இந்த கோவிலில், 2011ல் நடந்த கும்பாபிஷேகத்தின்போது, புதிதாக, 35 அடி உயரத்தில் கொடிமரம் நிறுவப்பட்டது. இதன் எடை, 350 கிலோ. இதன் மீது, 30 கிலோ செப்புத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. உடைந்த கொடிமரத்திற்கு பதிலாக, புதிய கொடிமரம், மூன்று மாதத்தில் அமைக்கப்படும். பின் அதற்கு கும்பாபிஷேகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.