பதிவு செய்த நாள்
26
மே
2017
11:05
வடலுார்: வடலுாரில் வள்ளலார் நிறுவிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலையில் 151வது ஆண்டு தொடக்க விழா நடந்தது. வடலுாரில் வள்ளலார், 1867ம் ஆண்டு மே மாதம் 23ம் தேதி சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலை தொடங்கி, அங்கு வருபவர்களுக்கு உணவு வழங்க தொடங்கினார். அதன் 151ம் ஆண்டு தொடக்க விழா நேற்று சத்திய தருமசாலையில் நடந்தது. தொடக்க விழாவை முன்னிட்டு தருமசாலையில் கடந்த 17, 18, 19 தேதிகளில் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம், அகண்ட பாராயணம் நடந்தது. 20, 21, 22, தேதிகளில் திருஅருட்பா முற்றோதல் நடைபெற்றது. ஆண்டு தொடக்க விழாவையொட்டி, நேற்று காலை முதல் அகவற்பாராயணம், தருமசாலையில் சன்மார்க்க கொடி உயர்த்துதல், சிறப்பு வில்லுப்பாட்டு, சிறப்பு சொற்பொழிவு, ஜீவகாருண்ய ஒழுக்கம், திருஅருட்பா, சன்மார்க்க தொண்டு, நான்கு வகை ஒழுக்கம், வள்ளலார் அருளிய மருத்துவம் ஆகிய தலைப்புகளில் சொற்பொழிவு நடைபெற்றது.