பதிவு செய்த நாள்
26
மே
2017
01:05
குளித்தலை: குளித்தலை அடுத்த, கூடலூர் பஞ்., தெற்கு கூடலூரில் உள்ள மேட்டு மாரியம்மன், கன்னிமார்அம்மன், பிடாரியம்மன், அழவாயிஅம்மன் மற்றும் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கான திருவிழா, கடந்த, 7 அன்று துவங்கியது. பொம்மநாயக்கன்பட்டி மற்றும் ராக்கம்பட்டி மக்கள், காவிரியில் இருந்து நீர் எடுத்து வந்து, செம்பாறைக்கல்லுபட்டி பொதுமக்கள் கம்பங்கள் கொண்டு வந்து காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கப்பட்டது. 21ல், அரசாயி கோட்டையில் இருந்து சமயபுரம் மாரியம்மன் பக்தர்கள் சார்பாக, பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வந்து மேட்டுமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். அன்று இரவு, கரகம் பாலித்து குதிரை வாகனம் முன்செல்ல, சிறப்பு அலங்காரத்தில் இருந்த மேட்டுமாரியம்மன், முத்துபல்லக்கில் வாணவேடிக்கையுடன் வீதிஉலா வந்து சன்னதி அடைந்தது. கோவில் முன்பாக கழுகுமரம் ஏறுதல், படுகளம் எழுப்புதல் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். விழாவில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.