திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பொதிகை மலையிலுள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் மணிமுழுங்கி மரம் உள்ளது. திருமண வரம், குழந்தை வரம் என வேண்டும் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேறியதுடன் மணி வாங்கி வந்து கோயில் வளாகத்தில் விநாயகர் சன்னிதியிலுள்ள மரத்தில் கட்டுகின்றனர்.
இப்படியாக பலநூறு எண்ணிக்கையில் மரத்தில் கட்டப்பட்டுள்ள மணிகள் நாளடைவில் மரத்தின் உள்ளேயே சென்று விடுகின்றன. இதனால் இந்த மரத்தினை பக்தர்கள் மணிமுழுங்கி மரம் என்று அழைக்கின்றனர்.
மணிமுழுங்கி மரத்தின் மேல் பகுதியில் இயற்கையின் அதிசயமாக இருகண்கள், நெற்றிப்பொட்டு, தும்பிக்கையுடன் கூடிய வகையில் விநாயகர் உருவம் உருப்பெற்றுள்ளது பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.