தியாகதுருகம்: தியாகதுருகத்தில் உள்ள விநாயகர், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. தியாகதுருகம் நகரின் மையப்பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமையான விநாயகர், கன்னிகாபரமேஸ்வரி கோவிலை செப்பனிட்டு புதுப்பிக்க ஆரியவைசிய சமூகத்தினரால் முடிவெடுக்கப்பட்டது. கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தான தலைவர் பாண்டுரங்கசெட்டியார், ஆரியவைசிய சமூக தலைவர் அபரஞ்சி தலைமையில், திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கு முன் பணிகள் துவக்கப்பட்டது. பக்தர்கள் அளித்த நன்கொடையை கொண்டு கட்டுமான பணிகள் நடந்தது. கோவிலில் உள்ள பழமையான மூலிகை வண்ண கலவையால் வரையப்பட்ட சாமி ஓவியங்களின் தன்மை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. கருவறை விமானங்களும் தொன்மை மாறாமல் செப்பனிடப்பட்டது.
கோவிலில் விநாயகர், கன்னிகாபரமேஸ்வரி, வரதராஜபெருமாள், பாலமுருகன், நவகிரக சன்னதி சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது. கோவிலின் உட்பிரகாரத்தில் இருந்து தெற்குபுறமாக பக்தர்கள் செல்ல புதிதாக வாசல் ஒன்றும் அமைக்கப்பட்டது. தற்போது திருப்பணி வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 8 ம்தேதி கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு இதற்கான பூஜைகள் 5ம் தேதி துவங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.