பதிவு செய்த நாள்
01
ஜூன்
2017
01:06
கோவை : கடந்த நான்கு மாதங்களாக,வெள்ளியங்கிரி மலையில்,பக்தர்களால் குவிக்கப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள்,அங்கிருந்து அகற்றப்பட்டு, மலைப்பகுதியே, பளிச் என துாய்மை அடைந்துள்ளது. கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது, வெள்ளியங்கிரி மலை. கோவை நகரிலிருந்து, 34 கி.மீ., தொலைவில் உள்ள, இந்த மலையின் அடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கிருந்து ஏழு மலை களைக் கடந்து சென்றால், வெள்ளியங்கிரி மலையுச்சியில் சுயம்பு வடிவமாக வீற்றிருக்கும் ஈசனை தரிசிக்க முடியும்; இதனால், இந்த மலை, சிவ பக்தர்களால், தென் கயிலாயம் என்று போற்றப்படுகிறது.
அழகிய ஆன்மிகத்தலம்!
ஆன்மிக முக்கியத்துவம் மட்டுமின்றி, அழகும், பசுமையும் இணைந்த இந்த மலைப்பகுதி, சூழல் பார்வையிலும் மிகமிகமுக்கியமான இடமாகக் கருதப்படுகிறது.வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைப்பகுதிக்குச் செல்வதற்கு, பிப்.,1லிருந்து மே 31 வரையிலான நான்கு மாதங்கள் மட்டுமே, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கடினமான மலையேற்றம் செய்ய வேண்டிய இந்தஆன்மிகப் பயணத்தில், வயதானவர்களை விட, இளையவர் கூட்டத்தை அதிகம் காண முடியும். குறிப்பாக, சித்ரா பவுர்ணமி நாளில் மட்டும், லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் மலையேறுவர்; அவர்களில், 70 சதவீதம் பேர், இளைஞர்களாக இருப்பார்கள்; இது வேறெந்த ஆன்மிகத்தலத்துக்கும் இல்லாத தனிப்பெருமையாகும்.
இந்த ஆண்டில், வழக்கத்தை விட, பெருந்திரளாக இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர்; இவர்களில், 300க்கும் அதிகமான சாதுக்கள், இரு மாதங்களுக்கும் மேலாக, மலையிலேயே தங்கியிருந்து, சித்ரா பவுர்ணமியன்று, பாரம்பரிய முறையில் பூஜைகள் செய்தனர். கடந்த சில ஆண்டுகளாக, சிவகணேஷ் என்ற சிவ பக்தரால், உண்டியல் உரிமம் எடுக்கப் படுவ தால், கிரி மலை உச்சியில் வணிக நடவடிக்கைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன; இந்த ஆண்டிலும் அதே நிலை தொடர்ந்தது.அதேநேரத்தில், நீர்ச்சுனைகளில் தண்ணீர் இல்லாததால், அனைத்து பக்தர்களும் வீடுகளிலிருந்து பாட்டில்களில் தண்ணீர் எடுத்து வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; தண்ணீர் காலியான பின், பக்தர்கள் பாட்டில்களை மலைகளிலேயே ஆங்காங்கே எறிந்து விட்டனர்.
எங்கெங்கு காணினும்...: இதனால், ஏழு மலைகளிலும், எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக் பாட்டில்களும், பிளாஸ்டிக் பாக்கெட்களுமாக பரவிக்கிடந்தன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டில், குப்பைகளின் அளவு, பல மடங்கு அதிகமாக இருந்தது; வழக்கமாக, தமிழக வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர்கள், சில அமைப்பினர் இணைந்து, இவற்றை சுத்தம் செய்வர்; வழியோரங்களில் உள்ள குப்பைகள் மட்டுமே அப்போது அகற்றப்படும். ஆனால், இந்த ஆண்டில், மலைவாழ் பழங்குடியின மக்களைப் பயன்படுத்தி, வழியோரம் மட்டுமின்றி, மலை முழுவதும் பரவிக்கிடக்கும் அனைத்து பிளாஸ்டிக் குப்பைகளையும் அகற்றுவதற்கு, உண்டியல் உரிமதாரர் சிவகணேஷ் நடவடிக்கை எடுத்தார்.அவர்களும் படிக்கட்டுக்கள், மலைப்பாதையில் மட்டுமின்றி, அருகிலுள்ள பாறைகள், குகைகள், நீர்ச்சுனைகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குப்பைகளைச் சேகரித்து, பெரிய சாக்குப்பைகளில் திரட்டி, கீழே கொண்டு வந்தனர்.
மொத்தம் 85 சாக்குப்பைகளில் இவை சேகரிக்கப்பட்டன; இவற்றைத் தவிர்த்து, மலைக்குச் சென்ற பக்தர்களிடம், சோதனையின் போது, இரண்டு கோணிப்பைகள் நிறைய சிகரெட், பீடி மற்றும் பான் மசாலாப் பொருட்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.இவை அனைத்தும் லாரிகள் மூலமாக, வனத்துறையிடம்ஒப்படைக்கப்பட்டன. இந்தஆண்டில், அதிகமான பிளாஸ்டிக் பாட்டில்கள் இருப்பதால், அவற்றை மறுசுழற்சிக்கு அனுப்பவுள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காட்டுக்கு வேணும் பூட்டு!
ஆண்டுதோறும், பிப்., - மே வரையிலான நான்கு மாதங்களுக்கு மட்டுமே, கிரி மலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்; அதற்குக் காரணம், அப்போது மழை, குளிர் காற்று, பனிப்பொழிவு இருக்காது; வன விலங்குகள் நடமாட்டம் குறைவாக இருக்கும். ஜூனில்தென் மேற்குப் பருவமழை துவங்கி விடும் என்பதோடு, காற்றின் வேகமும் அதிகமாகி விடும்; இதனால், பிற மாதங்களில்,பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை; ஆனால், சமீபகாலமாக,பிற மாதங்களிலும், வனத்துறை அனுமதியின்றி, இந்தமலைக்குச்செல்வது அதிகரித்து வருகிறது; இப்படி அத்துமீறுவோர், யாராயினும் அவர்களைத் தண்டிக்க வேண்டிய பொறுப்பு,வனத்துறைக்கு இருக்கிறது. -நமது நிருபர்-