பதிவு செய்த நாள்
01
ஜூன்
2017
01:06
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் கும்பாபிஷேக விழா, நாளை (ஜூன், 2) கோலாகலமாக துவங்குகிறது. ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது, பழமையான சந்திரசூடேஸ்வரர், மரகதாம்பாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 14 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. இதற்காக, கோவிலில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. கோவில் கோபுரம் முன் நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (ஜூன், 2) முதல், கோவில் கும்பாபிஷேக விழா துவங்குகிறது. நாளை காலை, 7:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ
பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், யாகசாலை அலங்காரம், மாலை, 6:00 மணிக்கு மிருத்ஸங்கிரஹணம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், இரவு, 8:00 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாத்துதல், முதற்கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை மறுநாள் (ஜூன், 3) காலை, 8:00 மணிக்கு விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக சாலை பூஜை, ஹோமம், பூர்ணாகுதி, மாலை, 6:00 மணிக்கு மூலவர், மரகதாம்பிகை அஷ்டபந்தனம் சாத்துதல், இரவு, 8:00 மணிக்கு, மூன்றாவது கால யாக சாலை பூஜை, ஹோமம், நாடி சந்தனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
வரும், 4 அதிகாலை, 4:30 மணிக்கு, நான்காவது கால அனுப்தே யாக சாலை பூஜை ஹோமம், 6:00 மணிக்கு பூர்ணாகுதி, 7:00 மணிக்கு கோபுர கும்பாபிஷேகம், 8:00 முதல், 8:30 மணி வரை,
அனைத்து பரிவார மூர்த்திகள், அம்பாள், மூலவர் மகா கும்பாபிஷேகம், காலை, 10:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாணம் ஆகிய
நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கும்பாபிஷேக விழாவில், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.