பதிவு செய்த நாள்
01
ஜூன்
2017
02:06
ஓசூர்: ஓசூர் கீழ்கொல்லர் தெருவில் உள்ள, 23 அடி உயர ஆஞ்சநேயர் கோவில், மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள கீழ் கொல்லர் தெருவில், 23 அடி உயர சீதாராம் லட்சுமண சமேத ஆஞ்சநேயர் கோவில், மகா கணபதி கோவில், கிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் துவங்கியது. அன்று மாலை, 6:00 மணிக்கு விஸ்வசேனா பூஜை, கலச ஆராதனை, அக்னி பிரதிஷ்டை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து ஹோமம், ஸ்ரீவீர ஆஞ்சநேய மூலமந்திர ஜபம், பூர்ணாகுதி, மகா மங்களாரத்தி நடந்தன.
விழாவின், இரண்டாம் நாளான நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, சுப்ரபாத சேவை, கலச ஆராதனை, பஞ்சசுத்த ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், நவக்கிரக ஹோமம், கலச ஊர்வலம் நடந்தது. பின், காலை, 9:00 மணியில் இருந்து, 10:30 மணி வரை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.