பதிவு செய்த நாள்
07
ஜூன்
2017
02:06
ஓசூர்: கெலமங்கலம் அடுத்த காடு உத்தனப்பள்ளி கிராமத்தில் நடந்த கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்
செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த போடிச்சிப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட காடு உத்தனப்பள்ளி கிராமத்தில், சக்தி வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோவில்
உள்ளது. இக்கோவில் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.
அன்று மாலை, 5:00 மணிக்கு கங்க பூஜை, விநாயகர் பூஜை, கலச ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு, 9:00 மணிக்கு
தீமிதி விழா நடந்தது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு அம்மனுக்கு விசேஷ பூஜையை தொடர்ந்து, முத்தாளம்மா, மாரியம்மன் கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் எடுத்து வரப்பட்டு, கோட்டை மாரியம்மன் கோவிலில் வைத்து, மூன்று தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின் பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் கோவிலுக்கு
ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முதுகில் அலகு குத்திய பக்தர்கள், கிரேன் வாகனத்தில் தொங்கியபடி கோவிலுக்கு வந்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்
பொதுமக்கள் செய்திருந்தனர்.