கீழக்கரை : பெரியபட்டிணம் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரியபட்டிணம் செய்யதலி வலியுல்லாஹ் தர்காவில் 110ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு உருஸ் விழா நவ.,3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 4 மணிக்கு சந்தனக்கூடு தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜலால், ஜமால் ஜூம்மா பள்ளிவாசலில் இருந்து சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டது. இந்துக்கள் தீப்பந்தங்களை ஏந்தி முன் சென்றனர். வழி நெடுகிலும் பக்தர்கள் பூக்களை தூவி வரவேற்றனர். தர்கா வந்தடைந்த சந்தனக்கூடு மூன்று முறை சுற்றி கொண்டுவரப்பட்டது. மதநல்லிணக்கம் தொடரவும், உலக மக்கள் அமைதி வேண்டியும் சிறப்பு துவா ஓதினர். மாலையில் மீண்டும் தர்காவிலிருந்து சந்தனக்கூடு தூக்கப்பட்டு ஊர்வலமாக பள்ளிவாசலுக்கு கொண்டு சென்றனர். கமிட்டி தலைவர் சீனி அப்துல் லத்தீப், செயலாளர் அப்துல் மஜீது, ஊராட்சி தலைவர் எம்.எஸ்., கபீர், தொழிலதிபர் சிங்கம் பசீர், கமிட்டியாளர்கள் செய்யது இபுராம்சா, நஜ்முதீன், ஊராட்சி முன்னாள் தலைவர் அப்துல் ரகீம் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சுல்த்தானியா சங்கத்தினர் செய்தனர்.