உலக மக்களுக்கெல்லாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்: திருவாடுதுறை ஆதீனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2011 11:11
ஆழ்வார்குறிச்சி: தமெக்கென பிரார்த்தனை செய்யாமல் உலக மக்களுக்கெல்லாம் நன்மை கிடைக்க வேண்டுமென இறைவனிடம் வேண்ட வேண்டும் என திருவாடுதுறை ஆதீனம் கூறினார்.கடையம் வில்வவனநாதர் - நித்யகல்யாணி அம்பாள் கோயிலுக்கு வருகை தந்த சீர் வளசீர் 23வது குருமகா சன்னிதானம் திருவாடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிய பரமாச்சாரியார் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஆன்மீக பணியில் ஈடுபட்டு வரும் அம்பாசமுத்திரம் ஏ.பி.ஆர்.ஏஜன்சிஸ் அண்ணாமலை செட்டியாருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.பின்னர் அருளாசியில் உரையில், ""நம்மால் இயன்ற பணியை கோயிலுக்கு செய்ய வேண்டும். நம் சக்திக்கு ஏற்றவாறு திருப்பணி செய்வது முக்கியம். ஆலயம் செல்வது பக்தியை மட்டுமல்ல நல்ல பழக்க வழக்கங்களையும், கலைகளையும், ஓவியம், காவியம், கட்டடம், சிற்பம் போன்ற கலைகளையும் வளர்க்கிறது. கோயில் பணியாளர்களுக்கு முன்பெல்லாம் அரசு ஊதியம் வழங்கவில்லை. கோயிலை மையமாக வைத்து கோயிலும் மக்களும் வளர்ந்தனர். கோயில்கள் இருப்பதால் அங்கு 10 பேருக்காவது வேலை கிடைத்தது.தினமும் தவறாமல் பூஜைக்கு செல்ல வேண்டும். முதலில் அவரவர் தம் சொந்த ஊரில் உள்ள கோயில்களை பேண வேண்டும். அதற்கு பின்னர் தங்களுக்கு இஷ்டமான சபரிமலை, திருவண்ணாமலை போன்ற இடங்களுக்கு செல்லலாம். முதலில் தம் சொந்த ஊரில் உள்ள கோயில்களை தான் பராமரிக்க வேண்டும். பெற்ற தாயையும், பிறந்த மண்ணையும் பேணுவது போல் கலை பொக்கிஷங்களை கொண்ட கோயில்களை பராமரிக்க வேண்டும்.பக்தியோடு பன்னிரு முறைகளை பாட வேண்டும். உள்ளும் புறமும் தூய்மையாக இருக்க வேண்டும். தமக்கென பிரார்த்தனை செய்யாமல் உலக மக்களுக்கெல்லாம் நன்மை கிடைக்க வேண்டுமென இறைவனிடம் வேண்ட வேண்டும். ஒவ்வொரு பிரச்னைகளுக்கும் தீர்வு காண ஒவ்வொரு திருமுறைகளை பாராயணம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். இறைவன் எல்லா உலகிலும் கலந்தும் கடந்தும் உள்ளதால் தான் அவரை கடவுள் என்கிறோம். தெய்வப் பணியில் ஈடுபடுவது மிகவும் பாக்கியமானதாகும் என்றார்.முன்னதாக அனைத்து பக்தர்களுக்கும் விபூதி கொடுத்து ஆசி வழங்கினார்.