பதிவு செய்த நாள்
15
நவ
2011
11:11
சேலம்: சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில், தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலில், சுயம்பு வடிவில் இறைவன், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சுகபிரம்ம ரிஷி சிவன் அருள் பெற்ற தலமாதலால், சுகவனேஸ்வரர் என்று மக்களால் போற்றி வணங்கப்பட்டு வருகிறது. கடந்த, 98ம் ஆண்டு சுகவனேஸ்வரர் கோவிலுக்கு மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.மீண்டும் சுகவனேஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலை புதுப்பித்து, மறுசீரமைப்பு செய்யும் பணியை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் துவக்கி உள்ளனர். கோவில் புதுப்பிப்பு பணியில், புரதான கட்டிட கலை, பழைமை, தொன்மை மாற வாய்ப்புள்ளதால், தொல்லியல் துறை மூலம் கோவிலை முழுமையாக ஆய்வு செய்து, அவர்களின் அறிவுறுத்தல்படி, சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டது.இதையடுத்து, தொல்லியல் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் சந்திரபிரகாஷ் சிங் உத்தரவின் பேரில், தொல்லியல் துறை உதவி செயற்பொறியாளர் நாராயணன், ஸ்தபதி அருண்சபரி ஆகியோர், நேற்று சுகவனேஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். கோவில் உள் மற்றும் வெளி பிரகாரங்கள், கோவில் கோபுரம், வளாகம் உள்ளிட்டவற்றை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொல்லியல் துறை உதவி செயற்பொறியாளர் நாராயணன் கூறியதாவது: சுகவனேஸ்வரர் கோவிலின் தென்மை குறித்து ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவில் புனரமைப்பு பணியில் சிலைகள், கட்டிடங்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாத வகையிலும், பழைமை மாறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் ஆய்வு குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். தொல்லியல் துறை வழிகாட்டுதல்படி, கோவில் சீரமைப்பு பணியை இந்து சமய அறநிலையத்தறை அதிகாரிகள் மேற்கொள்வர். கோவில் ஆய்வு குறித்து, அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.