சுசீந்திரம் கோயில் ராஜ கோபுரத்தில் மூலிகை ஓவியங்களை புதுப்பிக்க ரூ.36 லட்சம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2011 11:11
சுசீந்திரம் : சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் ராஜகோபுரத்தின் 7 நிலை கோபுரங்களின் உள்ளே பழுதடைந்த நிலையில் காணப்படும் மூலிகை ஓவியங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க 36 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் இண்டெக் நிறுவனம் மூலம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படுகிறது.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் உள்ள ராஜகோபுரம் மற்ற கோயில்களில் உள்ள ராஜகோபுரங்களை விட வித்தியாசமானது. கோபுரத்தின் வெளிப்புறங்களில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிலைகள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. கோபுரத்தின் உள்ளே ஏழு நிலைகளிலும் அற்புதமான மூலிகை ஓவியங்கள் கண்ணை கவரும் விதத்தில் வரையப்பட்டுள்ளன.உள்ளத்தை கொள்ளை கொள்ளும் விதத்தில் தத்ரூபமாக வரையப்பட்டுள்ள இந்த மூலிகை ஓவியங்கள் தற்போதும் அதே மிடுக்கோடு காணப்படுகின்றன.ராமாயணம், மகாபாரதம், அத்திரி-அனுசூயா வாழ்க்கை முறை, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் தேவர்களும் குழந்தைகளாக உருமாறி தத்தாத்ரேயராக காட்சிதரும் வரையுள்ள புராண நிகழ்வுகள் மற்றும் மன்னர்கள் காலத்திய கலாசாரங்கள் உள்ளிட்ட ஏராளமான வராற்று நினைவுகளை ஓவியமாக பதித்து வைத்துள்ளது இந்த ராஜகோபுரம்.ஒவ்வொரு நிறத்திற்கும் அதற்கு உண்டான பச்சிலைகள் மற்றும் மூலிகைகளை அரைத்து, ரசாயனம் சேராத மூலிகை பெயிண்ட் தயாரிக்கப்பட்டு, அதை பயன்படுத்தி வரயைப்பட்ட இந்த ஓவியங்கள் சில விஷமிகளின் செயல்களால் தற்போது பழுதுபட்டு நிற்கிறது.காலத்தால் அழியாக பொக்கிஷங்களாக பாதுகாக்கப்படவேண்டிய இந்த அற்புத ஓவியங்கள் மீது அதன் பெருமையை உணராத சிலர் கிறுக்கியும், தங்களது பெயர்களை எழுதியும் அசிங்கப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகளால் பல ஓவியங்கள் சிதைந்துள்ளன. இது குறித்து "தினமலர் இருமுறை படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது.இதன் பயனாக கன்னியாகுமரி மாவட்ட தேவசம்போர்டு நிர்வாகம் இந்த மூலிகை ஓவியங்களை ஆய்வு செய்து, இவற்றை புதுப்பிக்க 36 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தது. தற்போது மூலிகை தன்மை மாறாமல் இந்த ஓவியங்களை அப்படியே புதுப்பித்து தரும் டில்லியை சேர்ந்த "இன்டேக் என்ற நிறுவனத்திடம் இந்த பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.அடுத்த மாதம் இதற்கான பணிகள் துவங்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்ட மூலிகை ஓவியங்கள் மீது கண்ணாடி பதிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை தேவசம்போர்டு இணை ஆணையர் ஞானசேகர் உத்தரவின் பேரில் தேவசம்போர்டு பொறியாளர் ராஜ்குமார் தலைமையில் பொறியாளர்கள் செய்து வருகின்றனர்.