பதிவு செய்த நாள்
15
ஜூன்
2017
11:06
கோவை: பெருமாளின், 10 அவதாரங்களை ஒருங்கிணைத்து, ஒரே சிலையாக, செங்கல்பட்டு திருவடி சூலத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு - திருப்போரூர் சாலையில், திருவடி சூலம், கோவில்புரம், ஆதி பரமேஸ்வரி தேவி, கருமாரியம்மன் மகா ஆரண்ய ஷேத்திரம் உள்ளது. இங்கு, 51 சக்தி பீடங்களையும் இணைத்து, 51 அடி உயர பிரம்மாண்ட கரு மாரியம்மன் எழுந்தருளி உள்ளார்.அதுமட்டுமின்றி, சப்த சைலஜ மத்திய பீடம் ஏழு மலைகள் சூழ, திருவேங்கடமுடையான் ஸ்ரீ வாரு வேங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. பொன்னிறத்தில் மின்னும், மூலவர் கருவறை யுடன் அமைக்கப்பட்டு உள்ள இந்த கோவிலின் நுழைவாயிலில், எம்பெருமாள் அனைத்து அவதாரங்களையும் ஒருங்கிணைத்த மிகப்பெரிய வண்ண மயமான சுதை வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. பெருமாள் இங்கு, மச்சம், கூர்மம், வராகம், பரசுராமர், ஸ்ரீ ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி என, அனைத்து அவதாரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூன்று முகங்கள், 20 கரங்களுடன் பிரம்மாண்டமாக சிலை காணப்படுகிறது. மூலவராக, திருப்பதியில் உள்ளது போன்று, வேங்கடேச பெருமாளாக எழுந்தருளியுள்ளார். இக்கோவில் குறித்த கூடுதல் விபரங்களுக்கு, 98405 00272, என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.