மயிலாடுதுறை: நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த தேரழுந்தூர் கிராமத்தில் புகழ்பெற்ற ஆமருவியப்பன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் 40 பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 10வது திவ்ய தேசமான இக்கோவிலின் வைகாசி திருவோண திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் தொட ங்கியது. உற்சவத்தின் முக்கிய விழாவாக 9ம் திரு நாளான நேற்று தேரோட்ட திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி செங்கமல வள்ளி தாயார் சமேத ஆமருவியப்பன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். தேர் நான்கு முக்கிய வீதிகளின் வழியாக சுற்றிவந்து நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘ஆமருவியப்பா’ ‘கோவிந்தா’ என்று பக்தி கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து பெருமாளை வழிபாடு செய்தனர்.