பதிவு செய்த நாள்
16
நவ
2011
11:11
திருப்பூர் : அய்யப்ப பக்தர்கள் அணியக்கூடிய வேஷ்டி, துளசி மாலை, துண்டு, பெட்ஷீட் விலை, கடந்த ஆண்டை விட 10 சதவீதம் உயர்ந்துள்ளது. கார்த்திகை மாதம் நாளை துவங்குகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் துவங்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் துளசி மாலை அணிந்து, விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய செல்வர். இந்தாண்டு அய்யப்ப பக்தர்கள் அணியும் வேஷ்டி, துளசி மாலை மற்றும் பெட்ஷீட் உள்ளிட்டவற்றின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது.பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறியதாவது:சிவப்பு, நீலம், ஆரஞ்சு, கருப்பு ஆகிய வண்ணங்களில் வேஷ்டிகள் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்தாண்டு ஒரு வேஷ்டி 100 முதல் 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு சீசன் துவங்கும் முன்பே விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒரு வேஷ்டி விலை 120 முதல் துவங்குகிறது. சரணம் அய்யப்பா வாசகம் எழுதப்பட்டவை; பட்டு ஜரிகை கொண்டவை என தரத்துக்கு ஏற்ப, 160 ரூபாய் வரை விலை மாறுபடுகிறது.வெள்ளி டாலர், சந்தனம், வெள்ளி பாவை, ருத்ரட்சம் உள்ளிட்ட 50 முதல் 70 விதமான துளசி மாலைகள் வந்துள்ளன. 25 ரூபாயில் துவங்கி 150 ரூபாய் வரை, தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயித்துள்ளோம். சிலர் அதிக விலை கொண்ட சந்தன மாலைகளை அணிய விரும்புபவர். அவர்களுக்கு பிரேத்யேகமாக 300 முதல் ஆயிரம் ரூபாய் விலை கொண்ட சந்தன மாலைகள் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.மாலை அணிபவர்கள் கட்டாயம் பெட்ஷீட் வாங்குவர். 85 ரூபாயில் இருந்து 350 ரூபாய் வரை பெட்ஷீட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. வெல்வட், ஜரிகை கொண்ட பெட்ஷீட்கள் 500 ரூபாய் முதல் உள்ளன. உத்தேசமாக ஒரு துளசி மாலை, ஒரு வேஷ்டி, துண்டு, பெட்ஷீட் கொண்ட செட் 300 ரூபாயில் இருந்து விற்பனை செய்கிறோம்.திருப்பூர், கோவை பகுதிகளுக்கு தேவையான ரகங்கள் அனைத்தும், ஈரோடு, குமாரபாளையம், சேலம் பகுதிகளில் இருந்து கொண்டு வருகிறோம். நூல் விலையில் அடிக்கடி ஏற்படும் மாற்றத்தால், துணி விலையை உயர்த்தி உள்ளனர், என்றார்.