பதிவு செய்த நாள்
17
நவ
2011
10:11
சபரிமலை : மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை திறந்தது. புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்றனர். இன்று கார்த்திகை 1ம் தேதி. இதற்காக, சபரிமலை நடை நேற்று மாலை 5.30 மணிக்கு திறந்தது. கடந்த ஒரு ஆண்டு காலமாக மேல்சாந்தி பொறுப்பு வகித்த சசிநம்பூதிரி, நடை திறந்து தீபம் ஏற்றினார். அதை தொடர்ந்து, புதிய மேல்சாந்திகளான சபரிமலை பாலமுரளி நம்பூதிரி, மாளிகைப்புறம் ஈஸ்வரன் நம்பூதிரி ஆகியோர், இருமுடி கட்டுடன் 18ம் படியேறி சன்னிதானம் வந்தனர். அவர்களுக்கு, தந்திரி கண்டரரு மகேஸ்வரரு மற்றும் சசிநம்பூதிரி ஆகியோர், பிரசாதம் கொடுத்தனர். தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாகவே சன்னிதானத்தில் முகாமிட்டிருந்த பக்தர்கள், 18ம் படியேறி வந்து சுவாமி தரிசனம் செய்தனர். வேறு எந்த விசேஷ பூஜைகளும் நடைபெறவில்லை. 6.30 மணிவாக்கில் ஸ்ரீகோவில் முன்புறம், சபரிமலை மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி வந்தார். அவருக்கு, தந்திரி கண்டரரு மகேஸ்வரரு பூஜைகள் நடத்தி, அய்யப்பன் மூலமந்திரம் சொல்லிக்கொடுத்த பின், ஸ்ரீகோவிலுக்குள் அழைத்துச் சென்றார், இதுபோல, மாளிகைப்புறம் மேல்சாந்தியாக ஈஸ்வரன் நம்பூதிரியும் பொறுப்பேற்றார். நடைதிறப்பை ஒட்டி, கடந்த இரண்டு நாட்களாகவே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. மாலையில் நடை திறந்த போது, சன்னிதான சுற்றுப்புறம் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, இன்று முதல் சபரிமலை நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கும். இதுபோல, இரவிலும் நடை அடைக்கும் நேரம் 45 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ளது.