ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பாதுகாப்பிற்காக சுவாமி, அம்பாள் சன்னதி, கோயில் பிரதான நுழைவு வாயில்கள், பிரகாரங்கள் உட்பட 12 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், பிரகாரத்தின் மேல் தளத்தில் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இரவு நேரத்தில் கோயிலின் மேல்தளத்தின் அனைத்துப்பகுதியிலும் ஒளிரும் வகையில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைப்பதற்கு கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கோயில் வடக்கு நந்தவனத்தின் கிழக்குபகுதியில் கருவூலத்தின் அருகிலும், மூன்றாம் பிரகாரம் தெற்கு பகுதியிலுள்ள சேதுமாதவ தீர்த்தம் அருகிலும், 30 மீட்டர் உயரத்தில் இரண்டு உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் இரவு நேரத்தில் கோயில் மேல் தளத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் ஊழியர்கள் இலகுவாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பை பலப்படுத்தும் வகையில் கோயில் பிரகாரத்திலும், மேல் தளத்திலும் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்படவுள்ளது. கோயில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம் கூறியதாவது: கோயில் பாதுகாப்பிற்காக 15 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படவுள்ளது. கூடுதலாக 12 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மூன்றாம் பிரகாரத்தில் தூண்களுக்கு இடையே ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் இரும்பு கிரில் தடுப்புகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது, என்றார்.