பதிவு செய்த நாள்
20
ஜூன்
2017
03:06
சிவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது இரவு கண் விழித்தலும், லிங்கங்களுக்கு செய்யப்படும் பலவகையான அபிஷேகங்களும், நான்கு கால பூஜையும்தான். யுகம் யுகமாக நடந்து வரும் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் வருடத்திற்கு ஒரு முறை வரும் மஹாசிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனை ஆராதித்தால் மங்களங்கள் சேரும். மனை சிறக்கும். அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி மோட்சம் சித்திக்கும் என்கிறது சிவ புராணம். சிவராத்திரி பல வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. மாத சிவராத்திரி அல்லது நித்திய சிவராத்திரி, பட்சசிவராத்திரி, யோக சிவராத்திரி மற்றும் மஹாசிவராத்திரி.
மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை சதுர்த்தசி மற்றும் தேய்பிறை சதுர்த்தசி தினங்கள் மாத சிவராத்திரிகளாகும். அப்படிப்பார்க்கும்போது ஒரு வருடத்திற்கு இருபத்து நான்கு மாத சிவராத்திரிகள் உள்ளன.
பட்ச சிவராத்திரி: தை மாதம் தேய்பிறை பிரதமையில் ஆரம்பித்து பதின்மூன்று நாட்கள், மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஒரு பொழுது மட்டுமே உணவு உண்டு. சிவனை பூஜித்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து, பதினான்காவது நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதமிருந்து மறு நாள் விரதத்தை முடிப்பது பட்ச நாளான சிவராத்திரி ஆகும்.
யோக சிவராத்திரி: 24 மணி நேரமாகப் பகுக்கப்பட்டிருக்கும் ஒருநாளை நம் முன்னோர்கள் 60 நாழிகையாகப் பிரித்தார்கள். சூரிய உதயம் முதல், இரவு வரை அமாவாசைத் திதி இருந்தால் அன்று யோக சிவராத்திரி. மேலும் திங்கட்கிழமை இரவு முழுவதும் தேய்பிறை சதுர்த்தசி திதி இருந்தால் அதவும் யோக சிவராத்திரி என்று சொல்லப்படும். அதேபோல் திங்கட்கிழமை இரவு நன்காம் ஜாமத்தில் அமாவாசைத் திதி அரை நாழிகைப் பொழுதேனும் இருந்தால் அதுவும் யோக சிவராத்திரியாகக் கொள்ளப்படுகிறது. சிவனுக்கு உகந்தது திங்கட்கிழமை (சோமவாரம்) என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. யோக சிவராத்திரியின் போது விரதம் இருந்து பூஜை செய்தால் அது மூன்று கோடி மற்ற சிவராத்திரி விரதம் இருந்த பலனுக்கு சமம் என்பது ஐதீகம்.
மஹாசிவராத்திரி: மாசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினமே மகா சிவராத்திரி எனப்படுகிறது. யுகம் யுகமாக கண் துஞ்சாமல் நம்மைக் காத்து ரட்சிக்கும் கயிலைக் கடவுளுக்காக, ஒரே ஒரு நாள் இரவு விழித்திருந்து, அவரை நாம் பூஜிக்கும் புண்ணிய ராத்திரி அது!
ராத்ரி என்ற சொல்லுக்கு, யாவும் செயலற்று ஒடுங்கி நிற்றல் என்று பொருள். எனவேதான் உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப்பொழுது, ராத்திரி எனும் பெயர் ஏற்றது. ஒரு முறை உலகமே இருண்டு கிடந்த மகாசங்கார (சம்ஹார) காலமாகிய ஊழிக்காலத்தில், பஞ்சபூதங்களும் செயலற்று மாயையில் ஒடுங்கும், எங்கும் இருள்சூழ , உலகம் செயலற்று எங்கும் அமைதி நிலவும். இந்த நிலையில், சிவபெருமான் ஒருவரே செயலாற்றுவார். அவரை அடுத்திருக்கும் சக்தியான தேவி, உலக உயிர்களை மீண்டெழச் செய்திட இரவு முழுவதும் விழித்திருந்து மறுநாள் பொழுது விடிந்து சிவபூஜை செய்து உலகம் மீண்டும் தழைக்கும் என்ற வரத்தைப் பெற்றாள். அதோடு, தான் சிவ வழிபாடு செய்ததை நினைவு கூறும் விதமாக அந்த இரவை சிவராத்திரியாக அழைத்து முறைப்படி விரதமிருந்து இரவில் நான்கு கால சிவபூஜை செய்வோர்க்கு மங்களங்கள் யாவும் தந்து நிறைவில் மேலான பதமும் தர வேண்டும் எனவும் வேண்டினாள். ஈசன் அவ்வாறே வரம் அளித்தார். ராத்திரி என்ற சொல்லுக்கு அளித்தல் என்ற பொருளும் உண்டு. உலக உயிர்களுக்கு மோட்சத்தை அளிப்பவர் சிவபெருமான். எனவே, சிவராத்திரி என அழைப்பதாகவும் கூறப்படுகிறது. ராத்ரி என்பதற்குப் பூஜித்தல் என்பதும் ஒரு பொருள். ஆக, சிவனாரை பூஜிக்கத் தகுந்த இரவே சிவராத்திரி என்றும் கூறுவர். உணவும் உறக்கமும் உயிர்க்குப் பகை. இந்த இடத்தில் உணவு என்பது வினைகள். அதனைச் செய்யச் செய்ய வினைகள் மூண்டு திரும்பத் திரும்ப பிறக்க நேரும். உறக்கம் என்பது மாயைக்குட்பட்டு மயங்குதலாகும். ஆக... உணவு நீக்கம் என்பது வினைகளை அகற்றுதலும், விழித்திருத்தல் என்பது ஆன்மா தன்னை உணர்ந்து கொள்வதுமாகும். இந்த தாத்பரியத்தின்படி, மகா சிவராத்திரி தினத்தில் ஊண், உறக்கம் ஒழிப்பது என்பது உண்மையில் வினைகளை வென்று ஆன்மாவானது தன்னை உணர்ந்து கொள்வதற்காகவே என சிவராத்திரி விரதம் குறித்து அற்புதமாக விளக்கம் தருவார்கள் ஆன்றோர்கள்.
ஆதியும் அந்தமும் இல்லா பராபரவஸ்து ஜோதி ரூபத்திலிருந்து லிங்கமாக வெளிவந்து பின்னர் லாவண்ய ரூபத்தை அடைந்த புண்ணிய தினம் தான் சிவராத்திரி. சிந்தை மகிழும் சிவராத்திரியில் லிங்க தரிசனம் செய்வதும், வழிபடுவதும் விசேஷம். லிங்கத்திலிருந்தே அனைத்தும் உருவாயின. அதேபோன்று இறுதியில் லிங்கத்தில் எல்லாம் அடங்குகின்றன. படைப்பு, காப்பு, அழிப்பு ஆகியன அதிலேயே அடங்கியுள்ளன என்கினறன புராணங்கள். சிவன்கோயில்களில் விளங்கும் பிரதிஷ்டா லிங்கங்கள் பிரம்மன், சிவா மற்றும் விஷ்ணுவைக் குறிக்கும் வகைகயிலேயே அமைகின்றன என ஆன்றோர் விளக்குவர். திருக்கோயில்களில் அருளும் சுயம்பு லிங்கங்களுக்கு அமையும் பீடம் பிரம்ம பாகமாகவும் நீர் விழும் கோமுகப்பகுதி மகாவிஷ்ணுவாகவும் போற்றப்படுகின்றன என்பர். ஆக, சிவலிங்க தரிசனத்தால் மும்மூர்த்தியரின் அருளையும் பெறலாம்.