சைவத்தின் மேற் சமயம் வேறிலை சிவமாம். தெய்வத்தின் மேற் தெய்வம் இல் என வியந்து போற்றுகிறது. அருணைக் கலம்பகம். இதற்குக் காரணம் சிவனையும் அவன் திருமேனியான லிங்கத்தையும் வழிபடுவது மிகப்பழமையான முறையாகும். இதை மொகஞ்சதாரோ ஹரப்பா போன்ற இடங்களில் கிடைத்துள்ள அகழ்வாய்வுகளின் மூலம் உறுதி செய்யலாம்.
இலிங்கமதாவது யாரும் அறியார் இலிங்கமதாவது எண்திசை எல்லாம் இலிங்கமதாவது எண்ணென் கலையும் இலிங்கமதாவது எடுத்தது உலகே.
என்று திருமந்திரப்பாடல் (1712) மூலம் சிவலிங்கத்தின் சிறப்பை உணரலாம்.
இந்தியாவில் பன்னிரு ஜோதிர்லிங்கத்தலங்கள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் இருப்பது இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இராமேஸ்வரம். இராமாயண காலத்திலிருந்து இன்றுவரை இத்தலம் புனிதத் தலமாக விளங்கி வருகிறது.
இராமபிரான் போரில் சிவபக்தனான இராவணனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட அதற்குப் பரிகாரமாக சிவலிங்கத்தை வழிபட வேண்டுமென அகத்தியர் உள்ளிட்ட முனிவர்கள் கூறியதன்பேரில் இராமபிரான் வழிபட்டார். இச்சம்பவத்தை திருநாவுக்கரசர் தமது தேவாரப் பதிகத்தில்,
குன்றுபோல் தோளுடைய குணமில்லா அரக்கர் தம்மைக் கொன்றுபோ ராழியம்மாள் வேட்கையாற் செய்த கோவில் நன்றுபோல் நெஞ்சமேநீ நன்மையை அறிதியாயிற் சென்றுநீ தொழுதுநீ கண்டாய் திருஇரா மேச்சுரமே
என்று பாடியுள்ளார்.
இந்த வழிபாட்டுக்காக வட நாட்டிலுள்ள கங்கை கரையிலிருந்து சிவலிங்கம் கொண்டு வரச் சென்ற அனுமன் குறிப்பிட்ட நேரத்தில் வராமல் போகவே, சீதா பிராட்டியார் கடற்கரை மண்ணில் அழகான சிவலிங்கத்தைச் செய்தார். இந்த லிங்கத்துக்கே இராமபிரான் குறிப்பிட்ட நல்ல நேரத்தில் பூஜைகளை செய்து முடித்தார். பின்னர் வந்த அனுமன், நான் கொண்டு வந்த கல்லினால் சிவலிங்கம் செய்யமுடியவில்லையே என ஏங்கினான். இதை உணர்ந்த இராமபிரான், சீதா பிராட்டி செய்த மணல் லிங்கத்திற்கு இடப்பக்கத்தில் அனுமன் கொண்டுவந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
இன்று இராமேஸ்வரம் கருவறையில் இருக்கும் சீதா பிராட்டியால் செய்யப்பட்ட மூலவர் லிங்கம் இராமநாதர் என்கிற பெயரிலும் அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசி விஸ்வநாதர் என்கிற பெயரிலும் விளங்குகின்றன.
காசி விஸ்வநாதருக்குதான் தினமும் முதல் பூஜை. அதற்குப் பின்னரே மூலவர் இராமநாதருக்கு பூஜை என்கிற மரபைக் கடைப்பிடித்து வருகின்றனர். இங்கு குடிகொண்டுள்ள இறைவியின் பெயர் பர்வதவர்த்தினி. திருஞானசம்பந்தர் மூன்றாம் திருமுறையில் ஒரு பாகம் மலைவளர் காதலி பாட ஆடி மயக்கா என மலைகளில் வளர்ந்த உமாதேவியை மலைவளர் காதலி என்கிற பெயரில் பாடியுள்ளார்.
காசிக்கு இணையாக புனிதத் தலமாக போற்றப்படும் தட்சிண காசியான இராமேஸ்வரத்தின் தீர்த்த யாத்திரையை எப்படி மேற்கொள்ளவேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். அதாவது காசிக்கு யாத்திரை செல்லும் முன்னரும் அதன்பின்பும் என இரண்டு முறை இராமேஸ்வரத்திற்கு செல்வது மரபு. முதலில் இராமேஸ்வரத்தில் புனித நீராடி, அங்கிருந்து மனலை (அதை வேணிமாதவர் என அழைப்பர்) எடுத்துச் சென்று கங்கையில் பூஜை செய்து கரைக்க வேண்டும். கங்கையிலிருந்து புனித நீரை எடுத்துக் கொண்டு மீண்டும் இராமேஸ்வரம் வந்து இராமநாதருக்கு அபிஷேகம் செய்து யாத்திரையை முடிக்கவேண்டும் என்பது தொன்றுதொட்டு வரும் கலாச்சார மரபு. காசிக்குச் சென்ற பயனை முழுமையாகப் பெற்றுத் தரும் தலம் இராமேஸ்வரம்தான்.
முற்காலத்தில் இராமநாதர் சன்னிதி பனையோலை குடிசையாய் இருந்தது. காலப்போக்கில் இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்களின் ஆதரவால் சிறிய கோயிலாகக் கட்டப்பட்டு படிப்படியாக நாயக்கர், சேதுபதி மன்னர்களால் பெரிதாக விஸ்தரிக்கப்பட்டது. இராமேஸ்வரம் கோயில் வளர்ச்சிக்கு இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களின் பங்கு மிகவும் மகத்தானது. உலகப்புகழ் பெற்ற மூன்றாம் பிராகாரம் முத்துராமலிங்க சேதுபதி மன்னரால் (1761-1772) 1,212 தூண்களைக்கொண்டு அழகுறச் கட்டப்பட்டது. இன்றும் இக்கோயில் பரம்பரை தர்மகர்த்தாவாக சேதுபதி மன்னர் பரம்பரையினர் உள்ளனர். தற்சமயம் இராஜா, என் குமரன் சேதுபதி என்பவர் தர்மகர்த்தாவாக (தக்கார்) உள்ளார்.
சேதுபதி மன்னர் பரம்பரைக்கு சிருங்கேரி சங்கராச்சாரிய சுவாமிகள் குலகுருவாக இருந்துவருகிறார்கள். சிருங்கேரி மடத்திற்கு உண்டான தலம் இராமேஸ்வரம் என ஸ்ரீஆதிசங்கரர் நிர்ணயித்ததால் இன்றும் கருவறையில் வீற்றிருக்கும் மூலவரை சிருங்கேரி சங்கராச்சார்ய சுவாமிகள் நேரில் தாங்களே சிறப்பு பூஜைகள் செய்யும் உரிமையை வழிவழியாகப் பெற்றுள்ளனர். அதேபோன்று இராமநாதர் கோயிலில் பணிபுரியும் சிவச்சாரியார்கள் சிருங்கேரி சங்கராச்சாரிய சுவாமிகளிடம் சிவதீட்சை, மந்திர தீட்சை பெற்ற பின்னர்தான் கருவறையில் சென்று பூஜை செய்யமுடியும். இதுபோன்ற சம்பிரதாயம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இராமேஸ்வரம் கோயிலைச்சுற்றி 22 நாழிக்கிணறுகள் மற்றும் தீர்த்த தலங்கள் உள்ளன.
இத்தலத்தில் புனித நீராடுவது கங்கையில் நீராடுவதற்கு ஒப்பான பயனைத் தரக்கூடியது. காரணம் மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமபிரான் சிவனை வழிபட்ட இடம் என்கிற பெரும் சிறப்பை இந்த இடம் மட்டும்தான் பெற்றுள்ளது.
(தாமிரபரணி நதி சேரும் கடற்கரையில் இருப்பவரும், கடற்கரையில் கணக்கற்ற பாணங்கள் கொண்டு அணைகட்டிய இராமனால் பூஜிக்கப்பட்ட வருமான இராமேஸ்வரர் லிங்கத்தை நான் பக்தியுடன் வணங்குகிறேன்)
இந்த சுலோகத்தின் வரிகள் மூலம் இராமேஸ்வரத்தின் சிறப்பையும் பெருமையையும் நாம் உணரலாம். மகாசிவராத்திரி சமயத்தில் இங்கு நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்குகொண்டு சிவபெருமானின் அருளுக்குப் பாத்திரராகுவோம்.