பதிவு செய்த நாள்
20
ஜூன்
2017
03:06
மதங்க முனிவர், பிரம்மாவின் அம்சமாக அவதரித்தவர். தனது தவப்பயனால் பார்வதி தேவியே மகளாகப் பிறக்கப் பெறும் பாக்கியம் பெற்றவர். மாதங்கி என்று அழைக்கப்பெற்ற இந்த அம்பிகை, அவதரித்தது ஓர் ஆடி வெள்ளிக்கிழமையன்றுதான். இவள் பார்வதி தேவியின் மந்திரிணி சக்தி ஆவார். சக்தி வழிபாட்டில் உள்ள தசா மகா வித்யாக்களில் (10 சக்திகளில்) ஒன்பதாவதாக கருதப்படும் மாதங்கி சகல கலைகளுக்கும் தலைவி. கரும்பச்சை நிறத்தோற்றம் கொண்ட இவள், 10 திருக்கரங்களுடன், கையில் மாணிக்க வீணை ஏந்தி, தலையில் பிறைசூடி காட்சியளிக்கிறாள். மாதங்கி அம்மனை வணங்கும்போது மாதங்கி முத்திரையுடன் சேர்த்து வழிபட முழு பலனைப் பெறலாம்.
எப்படி செய்வது?
இரண்டு கை விரல்களையும் கோர்த்து, உள்ளங்கை பகுதிகள் நன்றாக ஒட்டி இருக்க வேண்டும். இரண்டு கைகளில், நடுவிரலை மட்டும் மேல்நோக்கி நீட்ட வேண்டும். கைகளை தாடைக்கு அடியில் வைத்துக் கொள்ளவும். எனினும் விரல் நுனி தாடையை தொடக்கூடாது. இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை என 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பலன்கள்:
காளிதாசன் கவிபாடும் திறன் பெற்றது மாதங்கியின் அருளினால்தான். இவ்வாறே மாதங்கி முத்திரையும் சகலகலைகளிலும் சிறந்து விளங்க உதவும்.
மாதங்கி முத்திரையைத் தொடர்ந்து செய்து வர, நினைத்தவுடன் கவிபாடும் திறன், பேச்சு திறன், வாக்கு வல்லமை, நுட்பமான கலைகள் கற்கும் திறன், ஞாபக சக்தி, படிக்கும் திறன், இன்னிசைகளை கற்கும் திறன் ஆகியவற்றைப் பெறலாம்.
பிறரை தன்வசமாக்கிக் கொள்ளும் தன்மையும், பயமற்ற பதற்றமற்ற நிலையும், எந்த ஒரு செயலையும் நன்கு ஆராய்ந்து முடிவெடுத்து செய்து முடிக்கும் திறனும் ஏற்படும்.
உள்முக அறிவாற்றலும், கிரகிக்கும் தன்மையும், அறிவில் சிறந்தவர்களாக, மற்றவர்களால் மதித்து போற்றப்படும் புகழும் கிடைக்கும்.
புத்தியானது நேர்வழியில் சென்று, ஆத்மஞானம் மேம்படும்.
தாடைகளில் ஏற்படும் இறுக்கம், மன அழுத்தம் குறையும்.
குறிப்பிட்ட வயது தாண்டியும் பூப்பெய்தாக பெண்கள் இதைச் செய்து வர பூப்பெய்துவார்கள்.
கலைவாணியின் அம்சமாக விளங்கும் மாதங்கி அம்மனை வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்க முடியும்.