பதிவு செய்த நாள்
01
ஜூலை
2017
11:07
ஈரோடு: ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, நடராஜர் திருவீதியுலா நடந்தது. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழா நேற்று நடந்தது. நடராஜருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னர் பூர்ண அலங்காரத்தில், வெள்ளி சப்பரத்தில் நடராஜர், எழுந்தருளி திருவீதி உலா வந்தார். ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பி.எஸ்.பார்க், பிரப்ரோடு, காமராஜர் வீதி வழியாக வந்து, மீண்டும் கோவிலில் நிறைவடைந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* சென்னிமலை, கிழக்கு ராஜ வீதியில் உள்ள, கைலாசநாதர் கோவிலில், ஆனித் திருமஞ்சன விழா நேற்று தொடங்கியது. சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு, 16 வகை அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, நடராஜ பெருமான், சிவகாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
* கோபி பச்சமலை முருகன் கோவிலில், நடராஜர், சிவகாமி அம்பாள் சுவாமிக்கு, ஆனி திருமஞ்சன விழாவில், மகா தீபாராதனை, 108 சங்காபிஷேகம் நடந்தது. இதேபோல் பாரியூர் அமரபணீஸ்வரர் கோவில், கோபி ஈஸ்வரன் கோவிலிலும் ஆனி திருமஞ்சனம் நடந்தது.