பதிவு செய்த நாள்
18
நவ
2011
12:11
சேலம்: சபரிமலை மண்டல பூஜை திருவிழாவில், பக்தர்கள் கலந்து கொள்வதற்காக சென்னை, பிலாஸ்பூரில் இருந்து, சேலம் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை திருவிழாவுக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மண்டல பூஜையில் கலந்து கொள்வதற்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்வதுண்டு. சபரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்கு வசதியாக, தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து (வண்டி எண் 06001) கொல்லத்துக்கு வரும், 22ம் தேதி முதல் வாரம் ஒரு முறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை, 3.15 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. சேலத்துக்கு இரவு, 7.50 மணிக்கு வருகிறது. ஐந்து நிமிடம் கழித்து, 7.55 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு, ஈரோடு, கோவை வழியாக செல்லும் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 5.35 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது. கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து (வண்டி எண் 06002) வரும், 23ம் தேதி முதல் வாரம் ஒரு முறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கொல்லத்தில் இருந்து காலை, 11.30 மணிக்கு புறப்பட்டு, இரவு, 10.10 மணிக்கு சேலம் வந்தடைகிறது. ஐந்து நிமிடம் கழித்து இரவு, 10.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 3.40 மணிக்கு சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் ஸ்டேஷன் சென்றடைகிறது. அதேபோல், பிலாஸ்பூரிலிருந்து (வண்டி எண் 22815) எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து கோட்டயம் வழியாக, கேரள மாநிலம் கொல்லத்துக்கு (வண்டி எண் 06003) வாராந்திர சிறப்பு ரயில் வரும், 19ம் தேதி இரவு, 8.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுகிறது. சேலத்துக்கு நள்ளிரவு, 1.15 மணிக்கு வருகிறது. 1.20 மணிக்கு புறப்பட்டு, காலை, 11.30 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது. கொல்லத்தில் இருந்து (வண்டி எண் 06004) மாலை, 5.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், சேலத்துக்கு அதிகாலை, 4.15 மணிக்கு வந்தடையும். ஐந்து நிமிடம் கழித்து, 4.20 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு, சென்னை சென்ட்ரலுக்கு காலை, 10.45 மணிக்கு சென்றடைகிறது. இந்த இரண்டு ரயில்களும் வாரம் ஒரு முறை அடுத்த ஆண்டு ஜனவரி, 22ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில்கள் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காகவே இயக்கப்படுகிறது.