பதிவு செய்த நாள்
18
நவ
2011
12:11
காங்கேயம்: காங்கேயம், சிவன்மலை பால்வெண்ணேஸ்வரர் கோவிலில் திருப்பணி துவங்குவதுக்கான பாலாலய விழா நடந்தது. காங்கேயம், சிவன்மலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் புதிதாக ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம், சுற்றுப் பிரகார மண்டபம் போன்றவை 50 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவில் அருகே அமைந்துள்ள பழமையான, நல்மங்கை சமேத பால்வெண்ணேஸ்வரர் கோவில் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இக்கோவிலில் தனித்தனியாக அமைந்துள்ள நல்மங்கை, சுப்பிரமணியர், விநாயகர், பைரவர் சன்னதிகளை அகற்றிவிட்டு, புதிதாக ஆகம விதிப்படி அமைக்க திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை 5.30க்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, ரக்ஷாபந்தனம், கும்பஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், விசேஷ திரவ்யாஹூதி, மங்கள மகாபூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 5.30க்கு நாடிசந்தானம், விசேஷ திரவ்யாஹுதி, மங்கள மகாபூர்ணாஹுதி, கலசம் புறப்படுதல், கலசம் யோஜனம், தாருபிம்பத்துக்கு கலச அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் நடராஜன், உதவி கமிஷனர் பழனிக்குமார், கண்காணிப்பாளர் முருகையா ஆகியோர் செய்தனர்.