நாலா பக்கமும் ஆன்மிகம் என்பதே சிறிதும் இல்லாததையும், அதே வேளையில் அந்த இல்லாமையை நிறைவு செய்வதற்கான அசாதாரணமான ஆற்றல் தன்னுள் நிறைக்கப்பட்டிருப்பதையும் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் இறைக்காட்சியில் கண்டு திகைப்புற்றார். அஞ்ஞானத்தால் உருவான மயக்கமாகிய ரக்தபீஜ அரக்கனை மாய்க்க, உலக அன்னை இந்த யுகத்திலும் களம் ஒன்றைத் தயார்ப்படுத்திவிட்டாள் என்பதையும் அவர் புரிந்து கொண்டார். உலக அன்னையின் இந்தக் கருணைத் திருவிளையாடலைக் காணும் பேற்றை மீண்டும் உலகம் பெறப் போகிறது. அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியும் அனந்த குணமயியுமான அன்னையைப் போற்றிப் பாட வார்த்தைகளின்றி மக்கள் திகைத்து நிற்கப் போகிறார்கள்; அதிக வெப்பம் மேகத்தை உருவாக்குவதைப் போல, கெட்ட காலத்தின் இறுதியில் நல்ல காலம் வருவதைப் போல, எண்ணற்ற மக்களின் நீண்ட கால இதயபூர்வமான தேவையைத் தொடர்ந்து, அன்னை பராசக்தியின் அளப்பரிய கருணை திரண்டு இந்த வடிவம் (ஸ்ரீராம கிருஷ்ணர்) தாங்கி, குரு உணர்வின் ஓர் உருவாய் அவதரிக்கிறது. அன்னை தன் கருணையினால் இதனை குருதேவருக்குக் காட்டியருளினாள்.