மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, பிரம்மாந்திரம் என்ற ஏழுவகை நிலை உண்டு. ஒருமனிதனை எடுத்துக்கொண்டால் அவனது மூலாதாரம் - கால்கள். சுவாதிஷ்டானம் - இடுப்பு. மணிபூரகம் - வயிறு. அனாகதம் - இடுப்புக்கும் வயிறுக்கும் இடைப்பட்ட பகுதி. விசுத்தி - மனம். ஆக்ஞை - பிடரி. பிரம்மாந்திரம் - தலைப்பகுதி. ஆக ஏழுவகை நிலைகளில் மனிதனின் உடலமைப்பு உள்ளது. கோயில்களையும் ஏழுவகையாக பிரிப்பார்கள். சிவபெருமானை எடுத்துக்கொண்டால் அவரது மூலாதாரம் -திருவாரூர். சுவாதிஷ்டானம் - திருவானைக்காவல். மணிபூரகம் - திருவண்ணாமலை. அனாகதம் - சிதம்பரம். விசுத்தி - காளஹஸ்தி. ஆக்ஞை - காசி. பிரம்மாந்திரம் - கைலாஷ். இதுபோல தர்மசாஸ்தா எனப்படும் ஐயப்பசுவாமியின் மூலாதாரம் - பாபநாசம் சொரிமுத்தையன் கோயில். சுவாதிஷ்டானம் - அச்சன்கோவில். மணிபூரகம் - ஆரியங்காவு. அனாகதம் - குளத்துப்புழை. விசுத்தி - பந்தளம், ஆக்ஞை - சபரிமலை. பிரம்மாந்திரம் - காந்தமலை. இதன்படி ஆக்ஞை எனப்படும் பிடரியாக விளங்குவது சபரிமலை. மனித உறுப்பில் பிடரி முக்கிய பகுதியாகும். குழந்தைகளை சிலர் கோபத்தில் பிடரியில் அடிக்கும் போது, அப்படி செய்யக்கூடாது என பெரியவர்கள் எச்சரிப்பர். ஏனெனில், பிடரியில் அடித்தால் உயிர் போய்விடவும் வாய்ப்புண்டு. இவ்வகையில், சபரிமலை உயிர் ஸ்தலமாக விளங்குகிறது. எப்பேர்ப்பட்ட துன்பத்தையும் தீர்த்து உயிருக்கு பாதுகாப்பு தரும் தெய்வமாக சபரிமலை ஐயப்பன் விளங்குகிறார்.