பதிவு செய்த நாள்
11
ஜூலை
2017
11:07
லக்னோ: உ.பி.,யில் ஆண்டுதோறும் நடந்து வரும் புகழ்பெற்ற, கன்வர் யாத்திரை எனப்படும், காவடி யாத்திரை, நேற்று உற்சாகமாக துவங்கியது. ‘இதில் பங்கேற்போர், ஆபாச சினிமா பாடல்களை பாட வேண்டாம்; பிற சமூகத்தவர் மனம் புண்படும்படி நடக்க வேண்டாம்’ என, உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது. உ.பி.,யில், பா.ஜ.,வைச்சேர்ந்த , யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், சிவனை வழிபடும், கன்வர் யாத்திரை ஆண்டுதோறும் நடக்கும். பக்தர்கள், கங்கை நதி நீரை , சிறு பானைகளில் எடுத்துச்சென்று, சிவனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த யாத்திரையில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இந்நிலையில், இந்த யாத்திரை, நேற்று துவங்கியது.
இதையொட்டி, யாத்திரை பயணப்பாதையில், பக்தர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து, உ.பி., அரசு விடுத்துள்ள வேண்டுகோள்: யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்கள், பிற சமூகத்தவர் மனம் புண்படும்படி நடந்து கொள்ளக்கூடாது. அமைதியான முறையில் யாத்திரை செல்ல வேண்டும். ஆபாச சினிமா பாடல்களை, மொபைல் போனிலோ , ஆடியோபிளேயரிலோ போட்டு கேட்கக்கூடாது; பாடவும் கூடாது. அரைகுறை ஆடைகளுடன் யாத்திரை செல்லக்கூடாது. யாத்திரை பாதையில், மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் மது அருந்துதல், புகைபிடித்தல் கூடாது. உடல் நலம் இல்லாதவர்கள், தங் களுக்கு தேவையான மருந்துகளை எடுத்துச்செல்ல வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் மொபைல் போன் எண்களை வைத்திருக்க வேண்டும். இவ்வாறு உ.பி., அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.