பதிவு செய்த நாள்
21
நவ
2011
11:11
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அம்மாச்சத்திரம் காலபைரவர் கோவிலில் காலபைரவர் ஜெயந்தி பெருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ருத்ராபிஷேகம் நடந்தது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு சொந்தமான, 88 திருக்கோவில்களில் ஒன்றாக விளங்குவது அம்மாச்சத்திரம் ஞானாம்பிகை சமேத சப்தரீஷிவரரர் கோவிலாகும். இக்கோவிலில் உள்ள இறைவனை பார்வதி தேவியை சிவபெருமானுக்கு திருமணம் பேசி நடத்தி வைத்த சப்தரிஷிகளான மரீசி, அத்ரி, புலத்தியர், கிரது, ஆங்கிரசர், வசிஷ்டர், பரத்வாஜர் ஆகிய ஏழு பேரும் பூஜைகள் செய்து வழிபட்டதால் இத்தல சுவாமிக்கு சப்தரிஷிஸ்வரர் என்ற திருநாமம் பெற்றுள்ளது. இத்தலத்தில் அம்பாள் ஞானம்பிகை, பஞ்ச கன்னிகளாகிய மகேஸ்வரி, பிரம்மகி, வைஷ்ணவி, கௌமாரி, இந்திராணி ஆகிய இவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பாகும். எந்தத் தலத்திலும் இல்லாத சிறப்பாக அம்பாள் சன்னதி எதிரில் 12 ராசிகள் கொண்ட தமிழ் எண்களுடன் கூடிய நவகிரக சக்கரம் உள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் கால பைரவர் சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தை இயக்குபவதால் இவருக்கு காலபைரவர் என்று பெயர் பெற்றுள்ளது. இந்த பைரவரின் வாகனத்தின் முகம் வடக்கு நோக்கி இருப்பதால் பிதுர் தோஷங்கள் நீங்கும். இப்பைரவை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் அனைத்து நவகிரக தோஷத்திலிருந்து விடுபடுவார்கள் என்பது ஐதீகம். இந்த காலபைரவரின் ஜெயந்தியொட்டி நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. பின்னர் நவக்கிரக ஹோமம், சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை சிறப்பு ஹோமம், கடம் புறப்பாடு ஆகியவை நடந்தது. தொடர்ந்து காலபைரவருக்கு நடந்த சிறப்பு அபிஷேகத்தில் மூலிகை பொருட்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் படையிலிடப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை காலபைரவர் வழிபாட்டு குழுவினரும், கோவில் நிர்வாகத்தினரும், பணியாளர்களும் செய்திருந்தனர்.