பதிவு செய்த நாள்
12
ஜூலை
2017
01:07
தூத்துக்குடி:எட்டயபுரம் அருகேயுள்ள சிந்தலக்கரை ஸ்ரீகாளி பராசசக்தி தவசித்தர் பீடத்தில் 33ஆம்ஆண்டு ஆனி மாத திருவிழாவினையொட்டி சக்தி மாலை இருமுடி காணிக்கை செசலுத்துதல் மற்றும் உலக நன்மை வேண்டி வேள்வி பூஜை நடந்தது.
உலக நன்மை வேண்டியும், மழை பெய்யவும், இயற்கை செழிக்கவும் வேண்டி ஸ்ரீ காளி பராசக்தி அம்மனுக்கு ராமமூர்த்தி சுவாமிகள் தலைமையில் சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. இதில் மரத்தால் செய்யப்பட்ட சிறிய மாட்டு வண்டி, ஏர் கலப்பை, தொட்டில், விளையாட்டு உபகரணங்கள், பட்டு சேலைகள், 51 வகை உணவுகள், பழங்கள், அரிசி, பருப்பு, நவதானியங்கள் உள்ளிட்ட பொருட்களை அக்னி குண்டத்தில் போட்டு வேத மந்திரங்கள் முழங்க வேள்வி பூஜை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 42 அடி உயர வெட்காளியம்மன் சிலைக்கு 108 குடங்கள் பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சித்தர் வழிபாடு, மும்மத பிரார்த்தனை நடைபெற்றது. மாலை 6 மணியளவில் ராமமூர்த்தி சுவாமிகள் வெண்கல தீச்சட்டி ஏந்தி கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து செவ்வாடை அணிந்து, இருமுடி கட்டி கோவிலுக்கு வந்திருந்தனர். தவசித்தர் பீடத்தில் இருமுடியை இறக்கி வைத்து காணிக்கைகளை செலுத்தி அபிஷேகம் செய்தனர்.