சதுரகிரி ஆடி அமாவாசை விழா 4 நாளாக குறைப்பு : வறட்சி, குடிநீர் தட்டுப்பாட்டால் நடவடிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2017 11:07
வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நிலவும் கடும் வறட்சி, குடிநீர் பிரச்னையால் 10 நாட்கள் நடக்கும் ஆடி அமாவாசை விழா நான்கு நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவஸ்தலமான சதுரகிரி மலையில், ஆடி அமாவாசை விழா மிகவும் பிரபலமானது. 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து திரும்புவர்.
ஆலோசனைக் கூட்டம் : இந்த ஆண்டு திருவிழா ஜூலை 21ல் பிரதோஷம் முதல் துவங்குகிறது. ஜூலை 23ல் அமாவாசை வழிபாடு நடைபெற உள்ளது. இதையடுத்து மலையடிவாரமான தாணிப்பாறையில் நேற்று மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், ஜூலை 21 முதல் 24 வரை 4 நாட்கள் மட்டுமே விழா நடத்த அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அசோக்குமார், சிவகாசி ஆர்.டி.ஓ., சங்கரநாராயணன் கூறியதாவது: மலையிலும், அடிவாரப் பகுதிகளிலும் கடும் வறட்சி, குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மலையில் உள்ள இரு நீரூற்றுகளிலிருந்து 85 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து சேகரிக்கப்படுகிறது. இது பக்தர்களின் குடிநீர் தேவைக்கே போதாது. இந்நிலையில் பக்தர்கள் குளிப்பதற்கும், கழிப்பறைகள் பயன்பாட்டிற்கும் நீர் அதிகளவில் தேவைப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு திருவிழாவிற்கான நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் பக்தர்கள் மலையில் தங்குவதை தவிர்க்குமாறு அறிவுறுத்த உள்ளோம் என்றனர்.