சிவகங்கை, சிவகங்கை பையூர் பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 63 வது பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. இவ்விழா ஜூலை 7 காலை 9:15 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு தீப அலங்கார நெய்வேத்தியம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு தெப்பக்குளத்தில் இருந்து கோயிலுக்கு பூக்கரகம், தீச்சட்டி எடுத்து வரப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தினமும் மாலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக வழிபாடு நடந்தது.
ஜூலை 9 ல் கோயில் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது. ஜூலை 14 காலை 10:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிேஷகம், அலங்கார நெய்வேத்தியம் நடந்தன. மாலை 4:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் இருந்தார். தொடர்ந்து பூச்சொரிதல் விழா நடந்தன. பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஏற்றுதல், பிள்ளைத் தொட்டில் கட்டுதல், முடி இறக்குதல் போன்ற நேர்த்திகடன்களை பக்தர்கள் செய்தனர். மதியம் அன்னதானம் நடந்தது. மாலை மதுரை ரோட்டில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இரவு முழுவதும் சிவகங்கையில் ஆங்காங்கே கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை பூஜாரி பூமிநாதன், தக்கார் இளங்கோவன் செய்தனர்.