திருப்பதி - திருமலையில் உள்ள உத்ஸவர்களில் நான்கு ஸ்ரீனிவாசர்கள் அருள்புரிகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. போக ஸ்ரீநிவாசர்: வெங்கடாஜலபதியின் பாதங்களின் (காலடியில்) அடியில் இருப்பவர். இருவருக்குத் தினந்தோறும் அபிஷேகம் நடைபெறும். ஏகாந்த சேவையில் இவரை எழுந்தருளச் செய்து பள்ளியறையில் வைத்துத் தாலாட்டுப் பாடுவர். உத்ஸவ ஸ்ரீநிவாசர்: திருமலை திருப்பதியில் நித்ய கல்யாண உத்ஸவம் காணும் மூர்த்தி ஆவார். ஊஞ்சல் உத்ஸவம் - பிரம்மோத்ஸவம் முதலியவற்றில் இடம்பெறும் தெய்வம். கொலுஷ ஸ்ரீநிவாசர்: திருமலை வெங்கடேசர் கோயிலில் பங்காருவாசல் என்றொரு வாசல் உண்டு. இது (தங்கம்) பொன்னால் ஆன வாசல். இங்கே தினந்தோறும் கொலுஷ ஸ்ரீநிவாசரை எழுந்தருளச் செய்து பஞ்சாங்கம் படிப்பார்கள். உக்கிர ஸ்ரீநிவாசர்: ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் உலா வருவார். கார்த்திகை மாதத்து கவுசிக ஏகாதசி நாளில் மட்டும் புறப்படுவார். விடியற்காலையில் புறப்பட்டு சூரிய உதயத்துக்குள் கோயிலுக்குத் திரும்பி வருவார். மூலவர் வெங்கடாஜலபதிக்குத் தினமும் ஒரு புதுப்பட்டு புடைவையைக் கொண்டு அலங்காரம் செய்யப்படுகிறது. திருமலையில் விதவிதமான நிவேதனங்கள் தாயாரானாலும், பல கோடிகளுக்கு அதிபரான வேங்கடவனுக்கு நிவேதனம் செய்வது மண் கலயத்தில் வைத்த தயிர் சாதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நிவேதனம் ஆனதும் அதனை பக்தர் ஒருவருக்கு அளித்து விடுவார்கள்.