பதிவு செய்த நாள்
19
ஜூலை
2017
10:07
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் காலை 6:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மட்டுமே மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை டி.கல்லுப்பட்டி யூனியன் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர்கள் வீரராகவ ராவ் (மதுரை), சிவஞானம் (விருதுநகர்), எஸ்.பி.,க்கள் மணிவண்ணன் (மதுரை), ராஜராஜன்(விருதுநகர்) உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
ஆடி அமாவாசை திருவிழா ஜூலை 20 முதல் 25 வரை நடக்கிறது. காலை 6:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பக்தர்கள் மலைமேல் ஏற அனுமதிக்கப்படுவர். பிளாஸ்டிக் தொடர்பான பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. அன்னதானம் இலையில் மட்டுமே வழங்க வேண்டும். வாழைத்தோப்பு, தாணிப்பாறை, சங்கிலிபாறை, இரட்டை லிங்கம், காத்தாடி மேடு, குளிராட்டி பாறை ஆகிய இடங்களில் மருத்துவ வசதி செய்யப்படும். ஒவ்வொரு 200 மீட்டர் இடைவெளியில் குடிநீர் தொட்டி அமைக்கப்படும். அடிவாரம் முதல் மலையேறும் பாதைகளில் 750 இடங்களில் மின் விளக்குகளும், 50 இடங்களில் கழிவறையும் அமைக்கப்படும்.தாணிப்பாறை விலக்கிலிருந்து அடிவாரம் வரை சாலையின் இருபுறமும் பக்தர்கள் தங்க சொந்த செலவில் தகர கொட்டகை மட்டுமே அமைக்க வேண்டும். 24 பேர் கொண்ட மருத்துவகுழு, 3 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்கும்.மதுரை மாட்டுத்தாவணி, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், பேரையூர், உசிலம்பட்டி, ராஜபாளையத்தில் இருந்து தாணிப்பாறை, வாழைத்தோப்புக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். 1300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர், என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.