பதிவு செய்த நாள்
20
ஜூலை
2017
12:07
ஆத்தூர்: சேலம், ஆத்தூர், வீரபாண்டி பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், ஆடி கிருத்திகை சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர் அருகே, வடசென்னிமலை கோவிலில், நேற்று ஆடி கிருத்திகை பூஜையொட்டி, பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்கள் வழிபாடு செய்தனர். அதேபோல், கோட்டை காயநிர்மலேஸ்வரர், வெள்ளை விநாயகர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.
* சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவில், மூலவருக்கு கோ பூஜை செய்து, அபிஷேகம் நடந்தது. மூலவர் கந்தசாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய உற்சவர் முருகனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து தங்க கவசங்கள் அணிவிக்கப்பட்டன. ஆடி கிருத்திகை தினத்தையொட்டி, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கந்தசாமி கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். சேலம், உத்தமசோழபுரம் பெரியநாயகி சமேத கரபுரநாதர் கோவிலில், தனி சன்னதியில் அருள்பாலிக்கும் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம், குமரகிரி தண்டாயுதபாணி கோவில், ஆடிகிருத்திகை பால் அபிஷேக விழாக்குழுவின் சார்பில், 44வது ஆண்டு, பால் அபிஷேகம் நடந்தது. தண்டாயுதபாணி உட்பட பரிகார தெய்வங்கள் அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.