பதிவு செய்த நாள்
24
ஜூலை
2017
01:07
மீஞ்சூர்: திறப்பு விழா காணப்பட்டும், பயன்பாடு இன்றி கிடக்கும் இளைப்பாறு மண்டபம், ஆடிப்பூரத்திற்காவது திறக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். மீஞ்சூர் அடுத்த, மேலுார் கிராமத்தில், திருவுடையம்மன் உடனுறை திருமணங்கீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த திருத்தலத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, இந்து அறநிலைய துறை சார்பில், 19.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இளைப்பாறு மண்டபம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டடம், கடந்த மாதம், 25ம் தேதி, திறப்பு விழா காணப்பட்டும், பக்தர்களின் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இளைப்பாறு மண்டபம் அருகில், பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட சுகாதார வளாகமும் பூட்டி கிடக்கிறது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், மண்டபத்தின் வெளிப்பகுதியில் அமர்ந்து இளைப்பாறி செல்வதுடன், அவசர உபாதைகளை கழிக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
ஆடி மாதம் துவங்கியதாலும், கும்பாபிஷேகம் முடிந்து, தினசரி மண்டல அபிஷேகங்கள் நடைபெறுவதாலும், கோவிலுக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இன்று, கோவிலில் ஊஞ்சல் உற்சவமும், இம்மாதம் 26ம் தேதி, ஆடிப்பூரம் விழாவும் நடைபெற உள்ளது. அச்சமயம் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், இளைப்பாறு மண்டபமும், கழிப்பறை கட்டடமும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், கழிப்பறை பணிகள் இருந்தன; தற்போது, அவை முடிந்து உள்ளதால், தினமும் திறந்து பயன்படுத்த உள்ளோம். பக்தர்கள் வரும் நாட்களில் முழு நேரமும் திறந்து இருக்கும். மற்ற நாட்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் திறக்க உள்ளோம், என்றார்.