பதிவு செய்த நாள்
24
நவ
2011
11:11
புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், உலகிலேயே மிக உயரமான, 80 அடி உயர மகர கும்ப வாசல் கட்டும் பணி நடந்து வருகிறது. புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், மொரட்டாண்டியில் சனீஸ்வர பகவான் கோவிலில் கிரகசாந்தி கணபதிக்கு, 57 அடி உயர சிலை, சனீஸ்வர பகவானுக்கு, 27 அடி உயர சிலை, நவ கிரகங்களுக்கு, 12 அடி உயரத்தில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், மற்றொரு சிறப்பம்சமாக உலகிலேயே, மிகவும் உயரமான, 80 அடி உயர மகர கும்ப வாசல் கட்டும் பணி நடந்து வருகிறது. மகர கும்ப வாசலில் தேவலோக வடிவம், யானையின் துதிக்கை, சிம்மக் கால்கள், மீன் உடல், பன்றி காதுகள், அன்னத்தின் இறக்கை, மயிலின் தோகை, குரங்கின் கண்கள், முதலையின் கோரைப் பற்கள், பல்வகை இலைகள் உள்ளிட்ட வால் உடைய, ஓர் அபூர்வமான உருவத்தை அமைக்கும் பணி, இரவு பகலாக நடந்து வருகிறது. மகர கும்ப வாசலில், 80 சதவீத பணிகள் தற்போது முடிந்துள்ளன. அடுத்த மாதம், 21ம் தேதி நடக்கும் சனிப் பெயர்ச்சியின் போது, இந்த மகர கும்ப தீபம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அப்போது, 8,000 லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி, மகர கும்ப தீபம் ஏற்றப்படுகிறது. சிதம்பர குருக்கள் முன்னிலையில், அன்னபாபா மகர கும்ப தீபத்தை ஏற்றி வைக்கிறார். சனி பகவான், 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை, அவருடைய உச்ச ஸ்தானமாகிய துலா ராசிக்கு வருவதால், உலக நன்மை வேண்டி இந்த மகர கும்ப தீபம் ஏற்றப்படுகிறது.