பதிவு செய்த நாள்
24
நவ
2011
11:11
சபரிமலை : சபரிமலையில் மலைபோல் குவியும் குப்பைகளைக் குறைக்க, "சபரிமலை புண்ணிய பூங்காவனம் என்ற புதிய திட்டத்தை, திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிமுகம் செய்துள்ளது. இதனை, சன்னிதானத்தில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். சபரிமலைக்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் கொண்டுவரும் இருமுடி கட்டிலுள்ள, பன்னீர்பாட்டில்கள், கற்பூரம் போன்ற பொருட்கள் அடங்கிய பிளாஸ்டிக் டப்பாக்கள், மலைபோல் குவிகின்றன. ஒரு பக்தர், 250 கிராம் கழிவுகளை சபரிமலையில் விட்டுச் செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், வனப்பகுதி மாசுபடுகிறது. இந்த, பிளாஸ்டிக் கழிவுகளை தின்னும் வனவிலங்குகள், உயிரிழக்கின்றன. மேலும், குப்பைகளை முழுமையாக அகற்றுவது, துப்புரவு பணியாளர்களுக்கு சவாலாக உள்ளது. எனவே, சபரிமலை வரும் பக்தர்கள், தேவையற்ற பொருட்களை, காட்டுப் பகுதிக்குள் வீசிச் செல்லாமல், தங்கள் ஊருக்கு கொண்டு செல்லும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சபரிமலையில் பணிபுரியும் கேரள போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், தேசிய பேரழிவு நிவாரணப் படையினர், தினமும் ஒரு மணிநேரம், இது போன்ற குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான துவக்கவிழா, சன்னிதானத்தில் நடந்தது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர் பத்மநாபன் தலைமை வகித்தார். தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி ஆகியோர் இந்த திட்டத்தை துவக்கி வைத்தனர்.