பதிவு செய்த நாள்
25
ஜூலை
2017
01:07
ஈரோடு: ஆக்கிரமிப்பு குறித்து தெரிவிக்க, மூன்று வழிபாட்டுத் தலங்களுக்கு, ரயில்வே கோட்ட மேலாளர், காலக்கெடு தந்துள்ளார். சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வர்மா, தொழிலாளர்கள் குறை கேட்பு கூட்டத்தை, ஈரோட்டில் நடத்தினார். அப்போது ரயில்வே நிலத்தில் ஆக்கிரமிப்பு தொடர்பாக, சாய்பாபா கோவில் பக்தர்கள், ரயில்வே காலனி சர்ச், மசூதி நிர்வாகிகள் தனித்தனியே அவரை சந்தித்தனர். கூட்டத்தில் ஹரி சங்கர் வர்மா பேசியதாவது: ஒவ்வொரு வழிபாட்டு தலமும் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிலத்தின் அளவை விட, அதிக அளவு நிலத்தை பயன்படுத்தி விட்டு, குறைந்த அளவு நிலத்துக்கான வாடகை, குடிநீர் வரியை செலுத்துகின்றனர். இதனால் ரயில்வே நிர்வாகத்துக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே தற்போது அனுபவிக்கும் நிலத்தின் அளவு குறித்து, வரும், 31க்குள் ஆவணங்களுடன் தெரிவிக்க வேண்டும். தங்களுக்கு தேவையான அளவு நிலம் குறித்து, கோரிக்கை விடுக்க வேண்டும். ரயில்வே நிர்வாகத்தால் கோரிக்கை மனு பரிசீலிக்கப்படும். உயரதிகாரிகள் உத்தரவிட்டால் இடம் வழங்கப்படும். இந்த விதி சாய்பாபா கோவிலுக்கு மட்டுமின்றி சர்ச், மசூதிக்கும் பொருந்தும். இவ்வாறு அவர் பேசினார்.