பதிவு செய்த நாள்
24
நவ
2011
12:11
பனமரத்துப்பட்டி : நாழிக்கல்பட்டியில் பிரசித்தி பெற்ற வனதுர்க்கை அம்மன் கோவிலில், பூஜை நடக்காமல் பூட்டிக் கிடப்பதால், பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம், நாழிக்கல்பட்டி பஞ்சாயத்து, கோட்டை கரடு அருகே பிரசித்தி பெற்ற வனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான கோவிலுக்கு உள்ளுர் மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். துர்க்கை அம்மன் கோவிலில், நாகதோஷம், திருமண தடை நீங்க, எலுமிச்சையில் விளக்கு போட்டு வேண்டுதல் வைக்கின்றனர். வாரம்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், மதியம் நடக்கும் சிறப்பு பூஜையில் ஏராளமானவர்கள் பங்கேற்று, அம்மனை வழிபடுவர். நாழிக்கல்பட்டி கிராம மக்கள், துர்க்கை அம்மன் கோவில் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை பராமரித்து வந்தனர். கோவில் பூசாரி மற்றும் அறங்காவலராக தர்மலிங்கம் என்பவர் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக, கோவில் மற்றும் நிலம் சம்மந்தமாக, நாழிக்கல்பட்டி கிராம மக்களுக்கும், கோவில் பூசாரிக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போதைய சேலம் குமாரகிரி கோவில் நிர்வாக அலுவலர் சுரேஷ்குமார், துர்க்கை அம்மன் கோவில் தர்க்கராக நியமிக்கப்பட்டார். நாழிக்கல்பட்டி கிராம மக்கள் தற்காலிகமாக, பூசாரி நியமித்து, கோவிலில் பூஜை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக துர்க்கை அம்மன் கோவில், பூஜை நடக்காமல் பூட்டியே உள்ளது. நேற்று, செவ்வாய்க்கிழமை என்பதால், ஸ்வாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள், பூட்டிக்கிடக்கும் கோவில் முன் நின்று ஸ்வாமி கும்பிட்டுச் சென்றனர். இது குறித்து, துர்க்கை அம்மன் பக்தர்கள் கூறியதாவது:துர்க்கை அம்மனுக்கு, வாரம்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களில் ராகு காலத்தில் பூஜை செய்ய வேண்டும். அதேபோல், அமாவாசை நாட்களில் அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும். பிரச்னை எதுவாக இருந்தாலும், துர்க்கை அம்மனுக்கு தவறாமல் பூஜை நடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்து சமய அறநிலைத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: நிர்வாக குறைபாடு காரணமாக, பூசாரி மற்றும் அறங்காவலராக இருந்த தர்மலிங்கம், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்துசமய அறநிலைத்துறை இணை ஆணையர் உத்தரவுபடி, மீண்டும் கோவில் நிர்வாகம் தர்மலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.